தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கி வந்த நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில், ரூ.1,000 வழங்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பச்சரிசி, வெல்லம், சர்க்கரை, செங்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் அதனுடன் ரூ. 1,000 ரொக்கமும் வழங்கி வருகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவித்துள்ளது. ஆனால், அதில் ரூ.1,000 ரொக்கம் இடம்பெறாதது குறித்து பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்தனர்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக வெளியிட்டிருந்த அறிவிப்பில், “2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள்” என்று அறிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை ரொக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம் இல்லாதது ஏன் என்று கேள்வி எழுந்த நிலையில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “கடந்த ஆண்டு, புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியிலிருந்து செலவிட்டிருக்கிறோம். ரூ.37 ஆயிரம் கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே ஒன்றிய அரசு தந்தது. ஒன்றிய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது. பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ பொங்கலுக்கு முன்பாக வழங்க பரிசீலிக்கிறோம்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“