தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், 2வது நாளில், பா.ம.க சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி, “சம்சாரம் இல்லாமல் வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது” என்று மின் துறை தொடர்பாக, எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில் உறுப்பினர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியதால் சட்டசபை கலகலப்பானது.
இந்த ஆண்டின் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (12.02.2024) தொடங்கியது. சட்டப்பேரவையில், முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனக் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல், வெளியேறியதால், முதல் நாள் நிகழ்வு பரபரப்பாக முடிந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை (13.02.2024) இரண்டாவது நாளாகக் கூடியது. சட்டப்பேரவையில், அண்மையில் மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், முன்னாள் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சட்டப் பேர்வைக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில், பேசிய பா.ம.க சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி, “சம்சாரம் இல்லாமல் வாழ முடியும், மின்சாரம் இல்லாமல் முடியாது” என்று மின் துறை தொடர்பாக, எழுப்பிய கேள்விக்கு அந்த துறையின் அமைச்ச அளித்த பதில் உறுப்பினர்கள் இடையே கலகலவென சிரிப்பை ஏற்படுத்தி சட்டசபை கலகலப்பானது.
மின்துறை தொடர்பாக பா.ம.க சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி பேசியதாவது: “பேரவைத் தலைவர் அவர்களே, சம்சாரம் இல்லாமல் மனிதன் வாழலாம், மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது. தாயின் கருவறை பரிசோதனையில் இருந்து கல்லறை வரை, அதாவது கருவறையில் இருந்து கல்லறை வரை மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் 3 கோடியே 26 லட்சத்து 65 ஆயிரம் பேர் இருந்தனர். 2023-ம் ஆண்டு 3 கோடியே 31 லட்சத்து 16 பேர் என மின் நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மின்சாரத்தினுடைய பயன்பாடு நாளும் அதிகரிக்கிற வேலையில், நம்முடைய தமிழ்நாட்டின் மின் தேவை என்பது 17 ஆயிரம் மெகா வாட். ஆனால், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி 16 ஆயிரத்து 915 மெகாவாட். மீதி இருப்பதை நாம் வெளியில் வாங்கிக் கொள்கிறோம்.
இந்த மின் உற்பத்தி என்பது நீர் மின் நிலையங்கள் மூலமாக உதாரணமாக குண்டாறு, காடம்பாறை, மேட்டூர் உள்ளிட்ட பெரிய அணைகள், சிற்றனைகள், கதவனைகள் என மொத்தம் நீர் மின் உற்பத்தி செய்யும் இடம் 47 இடம் இருக்கிறது. இவற்றின் மூலமாக 2 ஆயிரத்து 320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதைத்தவிர அனல் மின் நிலையங்களின் மூலமாக 4 ஆயிரத்து 320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதர மின் உற்பத்தியானது காற்றாலை, அணு மின் நிலையங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அனல் மின் நிலையங்கள் மூலமாக மற்ற மின் நிலையங்கள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிற மின் உற்பத்தி, சுற்றுச்சூழல் மாசுபடுதல், உயிரினங்களுக்கு கேடு விளைவிக்கின்ற காரணத்தால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்வது பொருத்தமானதாக இருக்கும். அதே நேரத்தில், அனல் உற்பத்தி போன்றவற்றுக்கு மின் உற்பத்தி செலவு அதிகமாகின்றது. அதே நேரத்தில் மின்கட்டண உயர்வும் இருக்கின்ற காரணத்தால், செலவு குறைவாக எந்த பாதிப்பும் இல்லாத நீர் மின் நிலையங்கள் மூலமாக மின் உற்பத்தி தேவை. இதை கருத்தில் கொண்டு, பென்னாகரம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே ஒரு ஒகேனக்கல்லில் கனமழை பெய்கிற நேரத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 170 முதல் 270 டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. அப்படிப்பட்ட இடத்தில் நீர்மின் நிலையங்கள் அமைத்தால் ஏதுவாக இருக்கும் என்ற காரணத்தால் இந்த திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற முன் வருமா என்று கேட்டு இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜி.கே. மணி கூறினார்.
ஜி.கே. மணியின் கேள்விக்கு பதிலளிக்க நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை சபாநாயகர் அப்பாவு அழைத்தார்.
ஜி.கே. மணி கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “உறுப்பினர் ஜி.கே மணி மின்சாரத்தின் உடைய தேவையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், அவர் துவக்கத்திலே சம்சாரம் இல்லாமல் இருந்துவிடலாம் என்று சொன்னார்கள். அதை இங்கே இருக்கக்கூடியவர்கள் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் அதை உறுதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை முதற்கண் நான் இந்த அவைக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று கூறியது உறுப்பினர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ஜி.கே. மணி கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “ஒகேனக்கல் நீர் மின் திட்டம் தொடர்பாக முத்தரப்பு ஒப்பந்தத்திற்கான வரைவு தமிழ்நாடு சார்பில் அனுப்பியிருந்தோம். இதற்கு கர்நாடக அரசு இசைவு தெரிவிக்கவில்லை. மேற்குறிப்பிட்ட திட்டங்களோடு கூடுதல் திட்டங்களை நாங்களாகவே செய்ய விரும்புவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இதற்குத் தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இதுபோன்ற திட்டங்களில் தமிழ்நாடு அரசின் ஒத்திசைவு தேவையென ஒன்றிய அரசிற்கு வலியுறுத்தியுள்ளோம். இரு மாநில எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் இத்திட்டத்திற்கு ஏற்ற சூழல் வரும் போது கட்டாயம் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.