தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பரந்தூர் மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அப்போது பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அதன்படி, "பரந்தூர் விமான நிலையம் குறித்து மக்களிடம் நான் தெரிவிக்க விரும்புகிறேன். விமான நிலையங்கள் உருவாக்குவது என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தேவையாக இருக்கிறது.
சென்னை விமான நிலையம் சிறியதாக இருக்கிறது. டெல்லி விமான நிலையம் 51 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மும்பையில் 1550 ஏக்கரில் விமான நிலையம் உள்ளது. ஹைதராபாத்தில் 5500 ஏக்கரில் விமான நிலையம் அமைந்துள்ளது. ஆனால் சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு மொத்தமாகவே சுமார் ஆயிரத்து 300 ஏக்கரில் தான் இருக்கிறது.
அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். இதன் எண்ணிக்கை அடுத்த ஆண்டுகளில் பல மடங்கு அதிகரிக்கும்.
சென்னை விமான நிலையத்தை எவ்வளவு தான் விரிவுபடுத்தினாலும் இதைக் கொண்டு சமாளிக்க முடியாது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவது நமது முக்கிய பணியாக அமைகிறது. அப்போது தான் சுற்றுலா, தொழில், போக்குவரத்து மேம்படும்.
பரந்தூர் விமான நிலையம் தொழில் புரட்சிக்கு வித்திடும். விஜய் மட்டுமல்ல; அரசியல் கட்சி தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக பொதுமக்களை சென்று சந்திக்கலாம்.
அப்படி சந்திக்கும் போது பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். அந்தக் குறைகளை அரசு நிச்சயம் ஆராயும். அங்கு செல்ல விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொருந்தும்.
பரந்தூர் விமான நிலையம் என்பது அனைத்து விதத்திலும் தேவையாக அமைந்துள்ளது" என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.