/indian-express-tamil/media/media_files/pinIwmL77MjR5gN24kfT.jpg)
பசுமை எரிசக்தி சார்ந்த 3 கொள்கைகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.44,125 கோடியில் 15 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன், பசுமை எரிசக்தி சார்ந்த 3 கொள்கைகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் தரப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அதற்கு ஒப்புதல் அளிக்கவும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் தமிழக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு தொடங்கிய அமைச்சரவைக்கூட்டம், 11.50 மணிவரை நடைபெற்றது. பின்னர், பகல் 12.25 மணிவரை அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் நிதியமைச்சர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: “
அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.44,125 கோடியில் 15 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முதலீடுகள் மூலம் 24,700 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வாகன உற்பத்தி, மின்னணு பொருட்கள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்கலன் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடுகள் வந்துள்ளன.
குறிப்பாக, தூத்துக்குடியில் சென்கார்ப்பில் ரூ.21,340 கோடி முதலீட்டில் 1114 பேருக்கு வேலை, காஞ்சிபுரத்தில் மெகர்சன் எலெக்ட்ரானிக்ஸில் ரூ.2,500 கோடியில் 2,500 பேருக்கு வேலை அளிக்கும் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக, சிப்காட் சார்பில், காஞ்சிபுரம் வல்லம்வடகால் பகுதியில் ரூ. 706.05 கோடியில் பாக்ஸ்கான் நிறுவன பணியாளர்கள் தங்குவதற்காக 18,720 பேர் தங்கும் வகையிலான கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
மேலும், தமிழ்நாடு நீரேற்று திட்டங்கள் கொள்கை, தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள் கொள்கை, தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை ஆகியவற்றுக்கும் இன்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.