2,600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சமூகம் கல்வி அறிவு பெற்றிருந்தது அதற்கான சான்றுகள் கீழடி தொல்லியல் ஆய்வில் கிடைத்துள்ளன என்று தமிழ்நாடு தொழில் துறை மற்றும் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மதுரை தமிழ்ச் சங்கத்தில் ஒரு வாரம் நடைபெறும் ‘இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை’யை அமைச்சர் தங்கம் தென்னரசு புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு தமிழ்ச் சொற்கள் இன்றும் சாமானியர்கள் மத்தியில் பயன்படுத்தப்படுகிறது. அன்றைய காலக்கட்டத்தில் நிலம் வகைகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தாலும், இப்பகுதியில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்தது தமிழ் மொழிதான். திருக்குறள், தொல்காப்பியம் போன்ற இலக்கியங்கள் மக்களுக்கு நெறிமுறைகளை போதிக்கின்றன” என்று கூறினார்.
இலக்கியம் பழமையானது அல்லது பழையது என்ற பொதுவான ஒரு கருத்து உள்ளது. தமிழ் இலக்கியம் பழமையானது என்றாலும், கடந்த காலப் பெருமைகளை எடுத்துரைத்து, அவை தங்கள் போதனைகளால் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாக இருக்கின்றன. மதுரை நகரம் தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரம், மதுரை நகரம் தமிழ் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த பயிலரங்கை நடத்த தமிழ்த்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் இதில் பங்குபெறுவது அதிர்ஷ்டம். தமிழறிஞர்களும், வல்லுனர்களும் வரும் நாட்களில் அவர்களுடன் உரையாடுவார்கள். தமிழ் இலக்கியத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்தப் பயிலரங்கம் உதவும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
பயிலரங்கில் பங்கேற்க தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 200 மாணவ, மாணவியர் தமிழ் இலக்கியத் திறனாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"