Tamil-nadu | thangam-thennarasu: தமிழக சட்டப் பேரவையில் இன்று புதன்கிழமை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதி பகிர்வில் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக கடுமையாக சாடியும், விமர்த்தும் பேசினார். இதுகுறித்து அவர் பேசுகையில், "பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு 1.5 லட்சம் தான் கொடுக்கிறது. தமிழக அரசு குறைந்தபட்சம் ஒரு பயனளிக்கு 7 லட்சம் ரூபாய் வரை கொடுக்கிறது. ஆனால் பெயர் மட்டும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். நிதியமைச்சர் 2021 -22 வரவு செலவில் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். நான் இந்த இடத்தில் பேசிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒரு ஒதுக்கிட்டையும் ஒன்றிய அரசு செய்யவில்லை. மாநில அரசின் நிதியில் தான் செலவிடப்பட்டு வருகிறது.
கிராமத்தில் வீடு கட்டுவோருக்கு ஒன்றிய அரசு வெறும் 72 ஆயிரம் தான் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், மீதமுள்ள ஒரு லட்ச்சத்து 20 ஆயிரத்தை மாநில அரசு தான் கொடுக்கிறது. மொத்தத்தில் இந்த திட்டத்திற்கான 70 சதவீதம் (1.68 லட்சம்) நிதியை தமிழக அரசு தான் வழங்குகிறது. இதேபோல் தான் ஜல் ஜீவன் சக்தி திட்டத்திற்கு 45 சதவீதத்திற்கும் குறைவாகத் தான் ஒன்றிய அரசு பங்களிக்கிறது. மீதமுள்ளவற்றை தமிழக அரசு தான் வழங்குகிறது.
தமிழ்நாடு வசூலித்துக் கொடுக்கும் வரிக்கு ஈடாக ஒன்றிய அரசிடம் இருந்து வரிப் பங்கு முறையாகவும் கிடைப்பதில்லை. ஜி.எஸ்.டி வரியால் தமிழகத்திற்கு ரூ.20,000 கோடி இழப்பு தான் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வரியாக வசூலித்து ஒன்றிய அரசுக்கு வழங்கும் 1க்கு வரிப்பங்காக தமிழ்நாட்டுக்கு கிடைப்பது 29 காசுகள்தான். 2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ 5.16 லட்சம் கோடி. ஆனால், வரிப்பகிர்வாக நமக்கு கிடைத்தது ரூ 2.08 லட்சம் கோடி மட்டுமே.
அதே நேரத்தில் உ.பி. வழங்கும் ஒரு ரூபாய்க்கு ஈடாக அந்த மாநிலத்துக்கு ஒன்றிய அரசு ரூ 2.73 ஐ வரிப்பங்காக கொடுக்கிறது. அதாவது, உ.பி.,யின் பங்களிப்பு ரூ 2.24 லட்சம் கோடி தான். ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்டது ரூ 9.04 லட்சம் கோடி. 2023 - 24 ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மாநிலத்திற்கான ஒதுக்கீடு ஒன்றிய அளவில் வெறும் 2.5 சதவீதம் மட்டும் தான். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் மொத்த ஒதுக்கீடு 18 ஆயிரம் கோடி. இது உ.பி. ஒரு ஆண்டில் வழங்கும் 17, 500 கோடியை விட கொஞ்சம் அதிகம்.
இப்படித்தான் நிதி பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. நமது ஊரில் ஒரு பழமொழி சொல்வதுண்டு. பசு உங்களுக்கு, பால் எங்களுக்கு. பசுவை பராமரிப்பது முதல் அதற்கு எல்லாம் வழங்குவது மாநில அரசு. ஆனால் பால் வாங்கிக் கொள்வது ஒன்றிய அரசு. ஆவி உமக்கு, அமுதபடி எமக்கு. நெய் வைத்தியம் செய்த ஆவி மாநில அரசுக்கு. ஆனால் அதில் இருக்கும் அமுதபடி ஒன்றிய அரசுக்கு." என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“