Advertisment

ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஆவாரா? பிரதமர் மோடி - தங்கமணி சந்திப்பு பின்னணி

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி - அமைச்சர் தங்கமணி சந்திப்பு பல்வேறு யூகங்களை கிளப்பியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minister Thangamani Met Modi, O.Panneerselvam, Demand for CM post

Minister Thangamani Met Modi, O.Panneerselvam, Demand for CM post

ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி - அமைச்சர் தங்கமணி சந்திப்பு பல்வேறு யூகங்களை கிளப்பியிருக்கிறது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வம், அண்மையில் தேனி மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பலரையும் புருவம் உயர்த்த வைத்தது. அதிமுக அணிகள் இணைப்புக்கு முன்பு பிரதமரை சந்தித்ததாகவும், அவர் கேட்டுக்கொண்டதால் இபிஎஸ் அணியுடன் இணைந்ததாகவும் குறிப்பிட்டார் ஓபிஎஸ். அணிகள் இணைப்பின்போது தனக்கு கூறப்பட்ட உத்தரவாதங்கள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்பதை டெல்லிக்கு உணர்த்தும் வகையிலேயே ஓபிஎஸ் அந்தப் பேச்சை வெளிப்படுத்தியதாக கருதப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் இப்படி வெளிப்படையாக மோடி பெயரை இழுத்து விடுவார் என்பதை பாஜக.வில் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் மோடி அப்படி கூறவே இல்லை என பாஜக தரப்பில் அதிகாரபூர்வ மறுப்பு எதுவும் இல்லை. அரசியல் ரீதியாக ‘பிள்ளை’யை கிள்ளிவிட்ட ஓபிஎஸ், பிறகு தொட்டிலையும் ஆட்டுகிற விதமாக, ‘ஒரு பெருந்தன்மையுடன் மோடி அதை குறிப்பிட்டார்’ என விளக்கம் அளித்தார்.

எப்படியோ தனது மனக் குமுறலை டெல்லிக்கு உணர்த்த விரும்பிய ஓபிஎஸ், பக்குவமாக அதை தேனி கூட்டத்தின் மூலமாக சாதித்தார். பிப்ரவரி 24-ம் தேதி ‘அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ தொடக்க விழாவுக்கு சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் தங்கமணியை சந்தித்த பின்னணியே ஓபிஎஸ் உருவாக்கிய அந்தக் கலகம்தான் என்கிறது விவரமறிந்த வட்டாரம்!

சென்னைக்கு வந்த மோடியை காவிரி பிரச்னை தொடர்பாக சந்திக்க பலரும் ஆர்வமாக இருந்தார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தனியான சந்திப்புக்கு முயற்சி செய்ததாக தகவல்! காவிரி பிரச்னை என்ற போர்வையில், தனது ஆட்சிக்கு முழு ஒத்துழைப்பைக் கேட்டுப் பெற்றுவிடும் திட்டத்தில் அவர் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் பிரதமர் அலுவலகம் அதை ஏற்கவில்லை. அதனாலேயே சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அம்மா ஸ்கூட்டர் திட்ட தொடக்க விழாவிலேயே காவிரி கோரிக்கையையும் வைத்து முடித்துவிட்டார் இபிஎஸ்.

ஓபிஎஸ் ஏற்கனவே பிரதமர் சந்திப்பு குறித்து அரசியல் ரீதியாக சர்ச்சையை உருவாக்கும் விதமாக பேசியதால், இனி அவருடன் தனித்த சந்திப்புக்கு வாய்ப்பே இல்லை என டெல்லியில் இருந்து கூறப்பட்டுவிட்டது. பிப்ரவரி 24-ம் தேதி இரவு சென்னை கிண்டியில் ஆளுனர் மாளிகையான ராஜ் பவனில் தங்கியிருந்த பிரதமர் மோடியை பாஜக தரப்பில் இல.கணேசன், தமிழிசை செளந்தரராஜன், பொன்னார் ஆகியோர் சந்தித்தனர்.

பாஜக தலைவர்களை தவிர்த்து, மோடியை சந்திக்கும் வாய்ப்பு பெற்ற ஒரே அரசியல் பிரமுகர் தங்கமணிதான். அதுவும் இபிஎஸ், ஓபிஎஸ்.ஸுக்கு மறுக்கப்பட்ட வாய்ப்பு மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கிடைத்ததுதான் கவனிக்கத் தக்கது. இருவரும் சுமார் 30 நிமிடங்கள் தனியாக சந்தித்து பேசினர்.

அதிமுக இணைப்பு விவகாரத்தில் தங்கமணியின் பங்கு அளப்பரியது. இரு அணிகளும் பிரிந்து இருந்த நேரத்திலும்கூட எங்கும் ஓபிஎஸ் குறித்தோ அவரது அணியினர் குறித்தோ உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டாதவர் இவர். எனவே அணிகள் இணைப்பை ஒபிஎஸ்.ஸுடன் பேசி துரிதமாக்கியது இவரும் வேலுமணியும்தான். அந்தக் காலகட்டத்தில் இபிஎஸ் தூதராக டெல்லியில் சென்று பலவேறு தலைவர்களை சந்தித்தவரும் தங்கமணிதான்.

இபிஎஸ்.ஸுக்கு முக்கியமான தகவல்களை கூற இன்றளவும் ஓபிஎஸ் தொடர்பு கொள்கிற நபரும் இதே தங்கமணிதான். இந்தப் பின்னணியில் இபிஎஸ்.ஸுக்கு சில தகவல்களை ‘பாஸ்’ செய்கிற விதமாகவே தங்கமணியை அழைத்து மோடி பேசியதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் உலவுகின்றன.

குறிப்பாக ஓபிஎஸ்.ஸின் மன வருத்தங்கள் பற்றிதான் இந்தப் பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது. கட்சியிலோ, ஆட்சியிலோ ஓபிஎஸ் நினைக்கிற எதையும் இப்போது சாதிக்க முடியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 200 நிர்வாகிகள் வரை (டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்) நீக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை ஜெயலலிதா பிறந்த தினத்திற்குள் நியமித்து விடுவோம் என ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டியில் ஓபிஎஸ் கூறினார். ஆனால் ஜெயலலிதா பிறந்த நாள் கடந்த பிறகும் அது நடக்கவில்லை.

ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்க, இபிஎஸ் அணியின் எந்த மாவட்டச் செயலாளர்களும் தயாராக இல்லை. ஏற்கனவே இருக்கிற மாவட்டங்களை மேலும் பிரித்து ஓபிஎஸ் அணிக்கு இடம் கொடுக்கலாம் என்றால், அதற்கும் இப்போதைய மா.செ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது போன்ற சிக்கல்கள் நீடித்தால் கட்சியில் தன்னுடன் இருந்த மதுசூதனன், மைத்ரேயன் போன்ற சீனியர்களையே சமாளிக்க முடியாது என்பதும் ஓபிஎஸ் தரப்பு குமுறல்!

இபிஎஸ் தரப்புடன் இப்போது இருக்கும் மூத்த நிர்வாகிகளில் பலர் ஆட்சி முடியும் தருவாயில் டிடிவி தினகரன் பக்கம் சாய்ந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பில் சுட்டிக் காட்டப்படுகிறது. எனவே அதை தவிர்க்க ஓபிஎஸ் தரப்புக்கு அதிகாரம் அவசியம் என்றும், அடுத்த ஓராண்டுக்கு ஓபிஎஸ்.ஸை முதல்வர் ஆக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அணிகள் இணைப்பு நேரத்தில் டெல்லி தரப்பு சார்பில் ஓபிஎஸ்.ஸுக்கு இப்படி உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதை நிறைவேற்றுவது குறித்துதான் இப்போது தங்கமணியிடம் பேசப்பட்டிருப்பதாக தகவல்! ‘ஓபிஎஸ்.ஸுக்கு ஏதாவது தகவல் கொடுக்க வேண்டிய அவசியம் இருந்திருந்தால், பிரதமர் தரப்பில் மைத்ரேயனை அழைத்துப் பேசியிருப்பார்கள். இபிஎஸ்.ஸுக்கு சில கண்டிப்பான அறிவுரைகளை வழங்கத் தேவை இருந்ததாலேயே தங்கமணிக்கு அழைப்பு’ என இந்த வியூகங்களை மேலும் விவரிக்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள்.

அண்மையில் டிடிவி தினகரன் அளித்த பேட்டியிலும், ‘ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை குறி வைத்தே பிரதமர் குறித்து பேசியதாக’ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கம் ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் உள்கட்சி விவகாரமும் எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் பதவியை அசைத்துப் பார்க்கும் போல தெரிகிறது. ஒருவேளை டெல்லியின் உத்தரவுகளுக்கு எடப்பாடி ஒப்புக்கொண்டாலும், அதிமுக.வின் இதர அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் ஓபிஎஸ்.ஸை ஏற்பார்களா? என்பது பெரிய கேள்வி!

‘பிரேக்கிங் நியூஸ்’களை இன்னும் எதிர்பார்க்கலாம்!

 

Narendra Modi O Panneerselvam Edappadi K Palaniswami Minister Thangamani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment