/indian-express-tamil/media/media_files/2025/04/18/9idvbeb51OD9oNpZGTr4.jpg)
"இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும். குலசேகரப்பட்டினம் போன்ற தென் தமிழ்நாட்டுப் பகுதிகளுக்கு இது வரப்பிரசாதம்” என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (17.04.2025) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறுகையில், “முதலமைச்சரின் தலைமையில், தமிழ்நாடு இன்று (17.04.205) தொழில் வளர்ச்சியில், பொருளாதார வளர்ச்சியில், முதன்மையான மாநிலமாக திகழ்கிறது. இதை இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். புதிய துறைகளில் நமது வளர்ச்சி இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, விண்வெளி தொழில்நுட்பத்தில் தமிழகம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது” என்று கூறினார்.
மேலும், “இதில் முக்கிய இலக்காக அடுத்த 5 ஆண்டுகளில், விண்வெளி துறையில், 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10 ஆயிரம் நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்; விண்வெளி துறைக்கு தகுதியான, திறமை வாய்ந்த ஆட்களை உருவாக்குதல்; இந்த மூன்று இலக்குகளுடன் விண்வெளி தொழில்நுட்ப சேவையில் நம்முடைய கவனம் இருக்க வேண்டுமென்று அமைச்சரவையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. விண்வெளி தொழில்நுட்பப் பந்தயத்தில் இந்தியாவில், ஏன் உலக அளவில் இருக்கும் போட்டியில் முதலமைச்சர் இன்று தமிழகத்தின் பாய்ச்சலுக்கு மிகப்பெரிய ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறார்.” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “இதில் 25 கோடி ரூபாயில் இருக்கின்ற சிறிய கம்பெனிக்கும் (Startups) மிகப் பெரிய ஊக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதுதான் இதில் மிகவும் முக்கியமான ஒரு அம்சம். விண்வெளி தொழில்நுட்ப மேம்பாடுகள் எல்லாம் ஒவ்வொரு நாளும் அதிவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ராக்கெட்டை பிரிண்ட் செய்கிறோம். உலக அளவில் எலான் மஸ்கின் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் எங்கேயோ இருக்கின்றது என்று நினைக்கின்ற நேரத்தில், அதற்குப் போட்டியாக நமது தமிழ்நாட்டில் இங்கே சென்னையில் ஒரு நிறுவனம் மிகச் சிறப்பான பணிகளை செய்து வருகிறது.
அவர்களை எல்லாம் ஊக்குவிக்கும் வகையில், இந்த பாலிசி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் patents வாங்குவதற்கு 50 சதவீதம் சலுகை நம்முடைய அரசாங்கமே வழங்கும். 300 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளுக்கு ஸ்பெஷல் பேக் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம்.” என்று கூறினார்.
மேலும், “தமிழகத்தில் ஒரு சில இடங்களில், ஸ்பேஸ் பே அறிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் முதலீடுகள் வருமேயானால், அதற்கு ஸ்பெஷல் package கொடுப்பதற்கான வழிவகைகள் இந்த பாலிசியில் இருக்கிறது. ஊதிய மானியமாக முதலாம் ஆண்டு 30 சதவீதம், இரண்டாம் ஆண்டு 20 சதவீதம், அதற்கடுத்து, மூன்றாம் ஆண்டு 10 சதவீதம் என்ற ஊதிய அளவில் கூட ஊக்கத்தை இந்த பாலிசி தருகிறது. தமிழ்நாடு ஸ்பேஸ் பாலிசி வெளியிடப்பட்ட இந்த நாள், விண்வெளி தொழில்நுட்ப கம்பெனியை உருவாக்கக்கூடிய இளம் தலைமுறையினருக்கு இது மிகப்பெரிய அறிவிப்பாக இருக்கும். உலகளவில் இருக்கும் பல தொழில் முனைவோர்களும் இனி நிச்சயமாக தமிழகத்தை நோக்கி வருவார்கள்” என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.