தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றதும் முதலில் 3 உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். அந்த 3 உத்தரவுகள் இதுதான்.
கலைஞர் கருணாநிதியின் பேரனும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி இன்று காலை (டிசம்பர் 14) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஓழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் இலாக்காககள் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்றபின், ரூ. 47.04 கோடி மதிப்பில் முதல்வர் கோப்பையை நடத்துவது உட்பட 3 உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் கோப்பைக்காக பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பாட்டம் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தார்.
“முன்பு, மாநில அளவில் மட்டும் பத்து பிரிவுகளில் நடத்தப்பட்டன. இப்போது, 16 பிரிவுகளின் கீழ், மாற்றுத்திறனாளிகள், பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய போட்டிகள் நடத்தப்படும்” என்று அதிகாரப்பூர்வமான செய்தி வெளியானது.
இதற்காக, ரூ. 47.04 கோடி ஒதுக்கீடு செய்து, மாவட்ட மற்றும் மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைப்பதற்கான உத்தரவில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.
ஏழ்மையான நிலையில் உள்ள 9 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.6,000 மாத ஓய்வூதியம் வழங்கும் உத்தரவில் அமைச்சர் உதயநிதி கையெழுத்திட்டார்.
கடந்த ஆண்டு பெருவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 25 மீட்டர் ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவையைச் சேர்ந்த நிவேதிதாவுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.
அமைச்சர் உதயநிதி முதல் கையெழுத்திட்ட கோப்புகள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு அரசு இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றபின், தலைமைச்செயலகத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளை ரூ.47 கோடி செலவில் 16 பிரிவுகளில் நடத்துவதற்காக மாவட்ட-மாநில அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைத்திட கோரும் கோப்பிலும், நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6ஆயிரமாக உயர்த்தவும், இந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாதத்தில் விண்ணப்பத்தவர்களில் தகுதியான 9 வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்குமான கோப்பிலும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் பெருவில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான தனிப்பிரிவில் வெள்ளி வென்ற கோயம்புத்தூர் செல்வி நிவேதிதா-வுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டு உரிய காசோலைகளை வழங்கினோம்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“