திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ தொடக்க பள்ளி மைதானத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2 ஆயிரம் குடும்பங்களுக்கு புத்தாடைகள், மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கினார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் என்றால் என்ன என்று எல்லாரும் கேட்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இங்கு அல்லேலூயா என வாழ்த்து சொல்லுவது தான் திராவிட ஆட்சி. இது தான் சமூக நீதி ஆட்சி இதை தான் பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் எங்களுக்கு கற்று கொடுத்தது. அந்த ஆட்சியைதான் முதல்வர் ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இன்னும் சொல்லப் போனால் நானும் ஒரு கிறிஸ்துவன் தான். நான் கிறிஸ்தவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது டான் பாஸ்கோ பள்ளியில் தான். பட்டம் பெற்றது லயோலா கல்லூரி. நான் காதலித்து மணந்தது ஒரு கிறிஸ்தவ பெண் எனவே அந்த உரிமையில் இங்கே வந்து பேசுகிறேன்
கடந்த வருட மழையில் சாலைகளில் மழை நீர் நின்றது. அதற்கு காரணம் கடந்த ஆட்சியின் விளைவு. ஆனால் இந்த ஆட்சியில் மாண்டஸ் புயலின் போது எங்கும் மழை நீர் நிற்கவில்லை. அதற்கு அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியாவுக்கு நன்றி.
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக இந்தியா டுடே கருத்து கணிப்பு கூறியுள்ளது. அதற்கு முதல்வரின் அயராத உழைப்பு மட்டும் திட்டங்கள் தான் காரணம், இதை மக்களிடம் எடுத்த சொல்ல வேண்டும் எனவும், இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அதற்கு அனைவரும் தயாராக வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபு, மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“