கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் ரூ.1,000 பெறுவதற்கு மேல்முறையீடு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அமைச்சர் உதயநிதி முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செப்டம்பர் 15-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பயனாளிகளுக்கான தகுதிகள் மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதன்படி, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள், நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள், உள்ளிட்ட நிபந்தனைகளின் படிப்படையில், மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்த 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட, தகுதி உள்ள பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம், அவர்களுடைய விண்ணப்பங்களை வருவாய்த்துறையினர் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் அக்டோபர் 24 நிறைவடைந்தது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் தோறும் ரூ.1,000 பெறுவதற்காக இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன.
அவற்றை சார் ஆட்சியர் - துணை ஆட்சியர் - வருவாய் கோட்ட அலுவலர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக் கொண்டனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டோம்” என்று கூறினார்.
இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான மேல்முறையீட்டு மனுக்கள் மீது பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் வரவு வைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“