லயோலா கல்லூரியின் உடைய முன்னாள் மாணவர் சங்க நிகழ்ச்சியில் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “லயோலா கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கர் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கல்லூரியின் முதல்வர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த ஆண்டு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று நாட்களுக்கு முன்பு லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக இங்கே நடந்தது. முதலமைச்சர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு என்னால் வர முடியவில்லை. அப்போது சுற்றுப் பயணத்தில் இருந்தேன் லயோலா கல்லூரியில் நூற்றாண்டு விழாவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது நிறைய பேருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அப்போது எனக்கு விருது இல்லையா என்று கேட்டேன். நீங்கள் வந்தால் போதும் என்று சொன்னார்கள். எனவே விருது வாங்கிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு நமது முதலமைச்சர் லயோலோ கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது, “நான் இங்கே முதலமைச்சராக வரவில்லை, முன்னாள் மாணவருடைய தந்தையாக வந்திருக்கிறேன்” என்று பெருமையாகக் கூறியிருந்தார்.
அதே போல தான், நான் இங்கே சொல்கிறேன். நானும் இங்கே ஒரு அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ வரவில்லை. நான் முன்னாள் மாணவர் என்ற உரிமையோடு கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.
ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு துறை சிறந்த துறையாக இருக்கும். ஆனால், லயோலோ கல்லூரியில் எல்லாத் துறைகளும் சிறந்து புகழ்பெற்று இருக்கும். எந்தத் துறை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரு சிறப்பான மாணவர் இருப்பார், அதில் உலகப் புகழ்பெற்ற மாணவர்கூட இருப்பார்.
லயோலா கல்லூரியில் படித்தேன், லயோலா கல்லூரியில் படிக்கப் போகிறேன் என்பதே ஒரு பெருமை தான். நான் டான் போஸ்கோ பள்ளியில் படித்து 92 சதவீதம் மதிப்பெண் எடுத்து இருந்தேன்.
லயோலாவில் பி.காம் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தேன். சீட்டு கிடைக்கும் என்று வீட்டில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது கல்லூரியில் இருந்து கூப்பிட்டு உனக்கு சீட்டு கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். அப்போது எங்கள் தாத்தா முதலமைச்சர் கிடையாது, அப்பா அமைச்சர் கிடையாது, வெறும் எம்.எல்.ஏ தான்.
அப்போது நான் நேர்காணலுக்கு வர வேண்டும் என்றார்கள். நேர்காணலுக்கு வந்தேன், எனக்கு ஏன் சீட்டு இல்லை என்று கேட்டதற்கு, சீட்டு கொடுக்க மாட்டோம் என்றார்கள். நீங்கள் பெற்றோரை கூப்பிட்டுக்கொண்டு வாருங்கள் என்று சொன்னார்கள். அப்போது நான் என் அம்மாவை கூட்டிட்டு கொண்டு வந்தேன்.
அப்போது எனது அம்மாவிடம் சொன்னார்கள். ஒரு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அது என்ன கடிதம் என்றால் கல்லூரியில் நடக்கக்கூடிய தேர்தலில் எந்த விதத்திலும் நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடாது. தேர்தலில் நிற்கவே கூடாது என்று என்னிடம் உறுதிமொழி வாங்கிக் கொண்டுதான் சீட்டு கொடுத்தார்கள். ஆனால், இன்றைக்கு நான் தேர்தலில் நின்று எம்எல்ஏவாகி வெற்றி பெற்று அமைச்சர் ஆகி வந்திருக்கிறேன். என்றால் அதற்கு காரணம் லயோலாவின் அந்த வளர்ப்புதான்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.