அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "அமைச்சராக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வரும் நாட்களில் ஆரோக்கியமான விமர்சனங்கள் வைக்கக்கோரி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக முதல்வர் மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கிறார். தி.மு.க., தலைவரின் ஆலோசனையுடனும், மூத்த அமைச்சர்கள் அவர்களுடைய வழிகாட்டுதலுடனும் என் பணிகளை சிறப்பாக செய்வதற்கு முயற்சி செய்வேன்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை எனக்கு நிர்வகிக்க வழங்கியுள்ளார்கள். தேர்தல் அறிக்கையில், 234 தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதற்கான ஏற்பாடுகள் செய்வதே என்னுடைய முதல் இலக்காக இருக்கிறது.
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் என்னுடைய பணிகள் இருக்கும்.
'முதலமைச்சர் தங்கக்கோப்பை' என்கிற திட்டத்தை தமிழக முதல்வர் அறிமுகம் செய்திருக்கிறார், அதன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
அந்த திட்டத்தின் மூலம் சிலம்பாட்டம், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு ஜனவரி மாதத்தில் இருந்து துவங்குகிறது.
'பீச் ஒலிம்பிக்ஸ்' என்கிற விளையாட்டு போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, 'ஏ.டி.பி., டென்னிஸ் போட்டியையும்' கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது", என்று கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil