நெல்லையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "எங்களின் பாரதிய ஜனதா கட்சியின் அவுட்ரீச் திட்டத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் கவனிக்க வேண்டிய சில பகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் தென்பகுதியில் சில இடங்களை நான் கவனித்து வருகிறேன்.
அந்த இடத்தை மேம்படுத்த கட்சி என்ன செய்கிறது, அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள், தமிழக மக்களுக்காக நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை நான் பார்க்கிறேன். இந்த திட்டம் ஜனவரி 29 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறும்.
இதற்குப் பிறகு, இங்கு உள்ள நிலை என்ன என்பதை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். பின்னர் அடுத்த மாதம் மற்றொரு தொகுதிக்கு வருவேன். அப்போது இங்கு நடக்கும் முன்னேற்றத்தை நாம் கண்காணிக்க முடியும்.
பரந்தூரில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, இடம் தமிழக அரசு தான் தேர்வு செய்தது. அவர்கள் இரண்டு இடங்களை தேர்வு செய்து, இரண்டு இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். இவையே தேவைகள் என்று அவர்களால் தான் எங்களுக்கு தெரியவந்தது.
அவர்கள் அதை அங்கே செய்ய முடிவு செய்தால், நாங்கள் அதற்கு ஏற்பாடு செய்வோம். அதற்கும் இந்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழக அரசு விரும்பினால், தமிழக மக்கள் விரும்பினால் மட்டுமே கட்டுவோம்", என்று கூறினார்.