coronavirus, coronavirus infection, tamil nadu, minister Vijayabaskar,
தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரில் பெறப்பட்ட வருமான வரிச் சோதனை உத்தரவு அடிப்படையில், நயினார் முகமது என்பவருக்கு விதிக்கப்பட்ட 2 கோடியே 12 லட்சம் ரூபாய் வரியை வசூலிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
கடந்த 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக புகார் எழுந்தது. அப்போது தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் அவரின் நண்பர்கள், உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில், சுகாதார துறைக்கு எழுதுபொருட்கள் சப்ளை செய்யும், ராயப்பேட்டை எழுது பொருட்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினரான நயினார் முகமது என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.
இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து, 3 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த தொகையையும், வருமானமாக அவர் காட்டிய ஒரு கோடியே 49 லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாயையும் சேர்த்து, 2018 - 19ம் நிதியாண்டுக்கு 4 கோடியே 52 லட்சத்து 48 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் என தீர்மானித்த வருமான வரித்துறை, இதற்கு 2 கோடியே 12 லட்சத்து 19 ஆயிரத்து 862 ரூபாய் வரி நிர்ணயித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நயினார் முகமது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த போதும், விளக்கமளிக்க தனக்கு எந்த அவகாசமும் வழங்காமல் வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நயினார் முகமதுவிடம் இருந்து வரி வசூலிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.