சசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்: இலங்கை தமிழர் படுகொலையில் கூட்டணி அரசாக இருந்த தி.மு.க. மற்றும் காங்கிரசை தண்டிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி, “முதலமைச்சர் கனவுல ஸ்டாலின் மிதந்துக்கிட்டு இருக்காரு. கடைசி வரைக்கும் அவரால முதல்வராகவே முடியாது.
நீங்கள் உங்கள் தந்தை அமைத்து கொடுத்த வழியில் வந்துள்ளீர்கள். நாங்கள் கிளைச் செயலாளர் பொறுப்பில் இருந்து உழைத்து இந்த நிலைக்கு வந்திருக்கோம். நான் கொல்லைப்புறமா வந்தேனா?.. நீங்கள் வந்தீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல், புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், டிடிவி தினகரன் சசிகலாவின் விசுவாசி அல்ல அவர் சசிகலா புஷ்பாவின் விசுவாசி என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சரமாரியாக விளாசியுள்ளார்.
தினகரனை விமர்சித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அமைச்சர், "டி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல, அவர், சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி.
சசிகலாவின் விசுவாசியாக இருந்திருந்தால், ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா போட்டோவை பேனரில் போடச் சொல்லியிருப்பார். ஆனால் பேனரில் சசிகலா போட்டோவை போடக்கூடாது என்றல்லவா கூறினார்.
தினகரன், சசிகலா புஷ்பாவின் விசுவாசியாக இருப்பதால் தான் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை, நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டிய சசிகலா புஷ்பாவை கூடவே வைத்துள்ளார்.
நெஞ்சிலே வஞ்சத்தை வைத்துக் கொண்டு விஷத்தை கக்குகிறார் டிடிவி தினகரன். இடைத்தேர்தலில் என்னுடன் போட்டியிட்டு ஜெயிக்க தயாரா? சவால் விட்டு கேட்கிறேன்.
மணல் கார்த்திகேயனையும், ஓடிப்போன ரத்தினசபாபதியை ஒருபக்கமும் பாதுகாப்புக்காக வைத்துக் கொண்டு டிடிவி பேசுகிறார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன், 10 ஆண்டுகள் பதுங்குக் குழிக்குள் இருந்தவர். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி... டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள்.
இலங்கை இறுதிக்கட்ட போரில், தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று, மு.க. ஸ்டாலின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் இருந்தே விலக வேண்டும்" என்றார்.