ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதன்முறையாக இன்று ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த தொடர் சந்தேகங்களுக்கு பிறகு, இது குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்ற அப்போலோ மருத்துவமனை, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த மாதம் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரான தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பிறகு, 'ஜெயலலிதாவை வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அழைத்துச் செல்ல ராதாகிருஷ்ணன் தான் மறுத்தார். அவர் மீது விசாரணை நடத்த வேண்டும்' என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்புக்கு உள்ளானது.
இந்தச் சூழ்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முதன் முதலாக ஆஜராகியுள்ளார். ஏற்கனவே மூன்று முறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இன்று அவர் ஆஜரானார்.
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்தும், வெளிநாட்டிற்கு ஏன் அழைத்துச் செல்லவில்லை என்பது குறித்தும், அமைச்சர் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டு குறித்தும் என பல கேள்விகள் விஜயபாஸ்கரிடம் கேட்கப்பட உள்ளது. தவிர, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அமைச்சர் ஒருவர் ஆஜராகுவது இதுவே முதன்முறையாகும்.