அமைச்சர் விஜயபாஸ்கர் தந்தை மறுப்பு : அமைச்சர் விஜயபாஸ்கர் லஞ்சம் வாங்கியதாக வாக்குமூலம் அளித்ததாக பரவும் செய்தி வதந்தி என்று அமைச்சரின் தந்தை இரா.சின்னசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவரது தந்தை சின்னசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கிக் கொடுப்பதாக தனது மகன் விஜயபாஸ்கரும், அவரது உதவியாளர்களும் பலரிடம் தலா ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினார் என வாக்குமூலம் அளித்தார் என செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த செய்தியை மறுத்து விஜயபாஸ்கரின் தந்தை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், "கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி எனது வீட்டில் நடந்த வருமானவரி சோதனை பற்றிய சில செய்திகள் அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு திரித்து பரப்பப்பட்டது.
இந்த வருமானவரி சோதனையின்போது கணக்கில் வராத பணம் வருமானவரித்துறையினரால் கைப்பற்றப்படவில்லை. இந்த சோதனையை தொடர்ந்து, நானும், எனது உறவினர்களும் வருமானவரித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறோம்.
எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் வருமானவரித்துறையினர் கடிதம் அனுப்பி நேரில் விசாரணைக்கு வருமாறு அழைத்த போதெல்லாம் வருமான வரித்துறையினரால் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகள் குறித்து அந்த துறையினருக்கு உரிய விபரங்களை அளித்துள்ளோம். ஆனால் ஊடகங்களில் வெளிவருவதுபோல் எந்தவித வாக்குமூலமும் அளிக்கப்படவில்லை.
எனது குடும்பம் சட்டப்படி செலுத்த வேண்டிய வருமான வரியினை தொடர்ந்து முறையாக செலுத்தி வருகிறது. என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் உண்மைக்கு புறம்பாக தவறான தகவல்களை பரப்பி வருவது மிகுந்த மனஉளைச்சலையும், மனவேதனையும் அளிக்கிறது. நானோ, எனது குடும்பத்தினரோ எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.
வருமானவரித்துறை சோதனை குறித்து எனது குடும்பத்தினர் சட்டரீதியாக எதிர்கொண்டு வரும் நிலையில், அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கி வரும் சூழ்ச்சிகளை நானும், எனது குடும்பத்தினரும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.