சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை இன்று சென்னை மருத்துவக் கல்வி இயக்குனரகம் அலுவலகத்தில் வெளியிட்டார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அலுவலகத்தில் வெளியிட்டார். ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நவம்பர் 18 முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கான மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான தனி தரவரிசை பட்டியலையும் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். தரவரிசை பட்டியலின் முதல் நகலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தேர்வுக் குழு செயலாளர் ஜி.செல்வராஜன் பெற்றுக்கொண்டனர்.
இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ், சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த என்.ஜீவிதகுமார், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.அன்பரசன், சென்னையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.திவ்யதர்ஷினி ஆகியோர் இந்த பட்டியலில் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆதி திராவிதர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.குணசேகரன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5சதவீத இட ஒதுக்கீட்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
அரசு ஒதுக்கீட்டு பிரிவில் ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.ஸ்ரீஜன், நாமக்கல்லைச் சேர்ந்த மோகனபிரபா ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த ஜி.ஸ்வேதா ஆகியோர் இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் முதல் 3 இடங்களைப் பெற்றனர்.
தேர்வுக் குழு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களுக்கான 24,714 விண்ணப்பங்களைப் பெற்றது. அவற்றில் 23,707 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த குழு மாநில பள்ளிக் கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களிடமிருந்து 15,885 விண்ணப்பங்களையும், சிபிஎஸ்இ மற்றும் எஸ்எஸ்சிஇ மாணவர்களிடமிருந்து 7,366, விண்ணப்பங்களையும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து 285 விண்ணப்பங்களையும் பிற வாரியங்களிலிருந்து 171 விண்ணப்பங்களையும் பெற்றுள்ளது.
தேர்வுக் குழு அளித்துள்ள தரவுகளின்படி, நடப்பு ஆண்டில் விண்ணப்பித்த 9,596 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 14,111 மாணவர்கள் முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்காக மொத்தம் 972 விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. அவற்றில் 951 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல்களை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “இந்த ஆண்டு கோவிட் -19 காரணமாக சமூக இடைவெளியை பராமரிக்க ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கலந்தாய்வு தொடங்கும். கலந்தாய்வுக்கான தேதிகள், நேரம், இடங்கள், மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். மேலும் ஒரு நாளைக்கு 500 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். சிறப்பு கலந்தாய்வுக்குப் பிறகு, 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடத்தப்படும்.
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் 405 இடங்களைப் பெறுவார்கள். அதில், 313 எம்பிபிஎஸ் இடங்களையும் மற்றும் 92 பி.டி.எஸ் இடங்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.
26 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3,650 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 227 எம்பிபிஎஸ் இடங்களும் 12 பி.டி.எஸ் இடங்களும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
15 சுய நிதிக் கல்லூரிகளில் 2,100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 1,061 மாநில ஒதுக்கீட்டிற்கும், 86 இடங்கள் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கும் ஒதுக்கப்பட உள்ளது.
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி வழங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் முழு தரவரிசை பட்டியலை www.tnmedicalselection.org இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் 405 இடங்களைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.