இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை மையங்களைக் கொண்டு வந்து தொடர்ந்து அதிகமான பரிசோதனைகளை செய்யக்கூடிய மாநிலம் தமிழ்நாடு 9,19,204 பரிசோதனைகளை செய்திருக்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஐசிஎம்ஆர் தொடர்பு தடமறிதல் விதிமுறைகளின்படி முதல்வர் பழனிசாமி தன்னை கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார் என்றும் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது என்று கூறினார். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: “தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் தொடர்ந்து எடுத்து வருகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு உலகளாவிய நோய்த்தொற்றை எதிர்த்து நுண்ணுயிரியை எதிர்த்து களத்தில் நின்று முதல்வர் தலைமையிலான தமிழக அரசு, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவலர்கள், தூய்மைப்பணியாளர்கள், ஆய்வக பணியாளர்கள் என அனைவரும் மக்களைக் காக்க எதிர்த்து போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்ற குரல் இருந்து வருகிறது. தமிழக அரசுக்கு மார்ச் மாதத்தில் முதல் கோரோனா வழக்கு வந்தது. தொடர்ந்து ஜூன் மாதம் இன்று வரை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஐசிஎம் ஆரின் ஒப்புதலைப் பெற்று தமிழகத்தில் 87 பரிசோதனை மையங்களை உருவாக்கி இருக்கிறோம். அரசு சார்பில் 46, தனியார் சார்பில் 41 பரிசோதனை மையங்கள் உருவாக்கியுள்ளோம். 3 ஷிஃப் முறையில் முழு திறனைப் பயன்படுத்தி கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 30 ஆயிரம் பரிசோதனைகளை செய்யக்கூடிய அளவுக்கு உயர்த்தியுள்ளோம். இந்தியாவிலேயே அதிக பரிசோதனை செய்யக்கூடிய மாநிலமாக உயர்த்தியுள்ளோம்.
இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை மையங்களைக் கொண்டுவந்து அதிகமான பரிசோதனை செய்கிற மாநிலமாக தமிழகம் உள்ளது.
உதாரணத்திற்கு நம்மைவிட 75 % மக்கள் தொகை அதிகம் கொண்ட நம்மைவிட 2 மடங்கு அதிகமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட 7,75,680 பரிசோதனை செய்திருக்கிறார்கள். ஆனால், நாம் 9,19,204 பேர்களுக்கு பரிசோதனை செய்திருக்கிறோம். இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனைகளை செய்துகொண்டிருக்கக் கூடிய மாநிலம் நம்முடைய தமிழ் மாநிலம். ராஜாஸ்தான் 6,14,612 பரிசோதனைகளை செய்திருக்கிறது. கர்நாடகா 5,08,335 பரிசோதனை செய்திருக்கிறார்கள். உ.பி. 4,52,212 பரிசோதனை செய்திருக்கிறார்கள். மேற்கு வங்கம் 3,70,892, டெல்லி 3,25,17, குஜராத் 3,25,532, ஆந்திரப் பிரதேசம் 3,03,358 பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதனால் இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை மையங்களைக் கொண்டு வந்து தொடர்ந்து அதிகமான பரிசோதனைகளை செய்யக்கூடிய மாநிலம் தமிழ்நாடு 9,19,204 பரிசோதனைகளை செய்திருக்கிறது.
உலக அளாவிய மருந்து கண்டுபிடிக்க முடியாத ஒரு தொற்று நோய்க்கு நோய் அறிகுறியைக் கொண்டு சிகிச்சை, விரிவான ஒருங்கிணைந்த சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை என சிகிச்சை அளித்து தமிழக அரசு அதிகமான எண்ணிக்கையில் குணமடைந்துள்ளனர். 55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மருத்துவமனையில் இருந்து 34,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1,358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 55% டிஸ்சார்ஜ் சதவீதம் உள்ளது. உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர், மத்திய சுகாதாரத்துறை ஆகியவை பாராட்டும் வகையில் தமிழகத்தில் குணமடைந்தவர்களின் சதவீதம் அமைந்த்துள்ளது.
பொதுவாக இந்த தொற்றுநோயைக் குறித்து ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன். ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம். பொதுமக்களுக்கு இந்த நோய் குறித்து பதற்றம் வேண்டாம். அதே நேரத்தில் கவனம் வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் கருத்தை கேட்க வேண்டும். முதல்வர் ஒவ்வொரு உயிரும் எனக்கும் முக்கியம் என்று சொல்கிறாரே யாருக்காக சொல்கிறார். மக்களுக்காகத்தானே சொல்கிறார். அதனால் மக்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு தர வேண்டும்.
வறட்சி, வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம் போன்ற பேரிடர்கள் வந்து சென்றுவிடும். அதன் பிறகு, அந்த இயற்கைப் பேரிடர்களை எதிர்த்து மீட்பு பணிகளைத் தொடங்கி நாம் களமாட முடியும். வெற்றி பெற முடியும். ஆனால், இந்த தொற்று நோய் பேரிடர் என்பது உலக சுகாதார நிறுவனம் மருத்துவ அவசர பிரகடனத்தை அறிவித்துள்ளது. இந்த தொற்று நோய் பேரிடர் எப்படி பரவும் எப்படி உச்சத்தை தொடும் என்பதில் வல்லுனர்கள் கணிக்க திணரும் நிலையில் உள்ளனர் என்ற சூழல்தான் இருக்கிறது.
இந்த சூழலிலும் தமிழக அரசு எந்தவித தயக்கமும் இல்லாமல் எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறது. நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போராடுகிறது. நோய் பாதித்தவர்களை உயிர்க் காத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறது. அவர்களிடம் இருந்து பிறருக்கு நோய் பரவாமல் தடுக்கும் பணிகளை செய்கிறது. பரிசோதனை மையங்களை அதிகரித்து பரிசோதனைகளை அதிகரிப்பது என்று பல விதங்களில் சவால்கள் இருந்தாலும் அதனை அரசு மிகுந்த திறனுடன் எதிர்கொண்டு சமாளித்து மக்களைக் காக்கும் பணிகளை செய்துகொண்டிருக்கிறது.
இயற்கை பேரிடர்களை போல ஒரு கால நிர்ணயம் வல்லுனர்கள் சொல்லக்கூடிய நிலையிலே இல்லை. அதனால்தான், முதல்வர் நேற்று குருநாணக் கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை ஆய்வு செய்தார். அப்போது ஒரு பத்திரிகை நிருபர் யதார்த்தமாக முதல்வரிடம் எப்போது இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் குறையும் என்று கேட்கிறார். முதல்வர் பற்றி அனைவருக்கும் தெரியும் கடவுள் பக்தி கொண்டவர். வெளிப்படையாக கோயிலுக்கு செல்லக் கூடியவர். அதீத பக்தி கொண்டவர். ஆகையினால் யதார்த்தமான கேள்விக்கு அவர் யதார்த்தமாக பதில் சொல்கிறார். முதல்வர் கடவுளுக்குதான் தெரியும் என்று சொல்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. கடவுள் என்ற வார்த்தையை சொன்னதில் என்ன குற்றம் கண்டுபிடித்துவிட்டீர்கள். கடவுள் என்ற வார்த்தையை சொன்னதும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஏன் கோபம் வருகிறது என்று தெரியவில்லை.
உலக சுகாதார நிறுவனத்தாலும் கனித்து சொல்ல முடியவில்லை. மருத்துவ நிபுணர்களாலும் கணித்து சொல்ல முடியவில்லை. ஆனாலும், இருக்கிற வளங்களை வைத்துக்கொண்டு கடுமையான பணிகளை மேற்கொண்டதால்தான் இந்தியாவிலேயே அதிகமான குணமடைந்தவர்கள் சதவீதம் உள்ளது. அந்தளவுக்கு முதலமைச்சரின் பணிகள் இருக்கின்றன.
அரசின் மீது எந்தவிதமான அடிப்படை ஆதாரமின்றி குற்றசாட்டுகளை சுமத்த வேண்டாம். ஆக்கப்பூர்வமான கருத்துகளை சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வரவேற்கிறோம். நல்ல வழிமுறைகளை சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறோம். பொத்தாம் பொதுவாக அடிப்படை ஆதாரமில்லாமல் அரசு மீது குற்றச்சாட்டுகளை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தொற்று நோய் புள்ளிவிவரத்தில், இன்றைக்கு உள்ள காலகட்டத்தில் தொற்று இரண்டு மடங்காக உயர்வதற்கு 15-16 நாள் ஆகிறது என்பதால் தமிழக அரசு சரியாக சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக சென்னையில் 250 நடமாடும் ஃபீவர் முகாம்களை செயல்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு 530 முகாம்கள் நடத்தப்படுகின்றன. நோய் பரவலைக் குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள் 14,814 பேர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சி சார்பில் கோவிட் பராமரிப்பு மையங்களில் 17,500 படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதே போல, தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று பிளாஸ்மா சிகிச்சை மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது. டிஎன்எம்சி மூலம் ரெம் டெசிவர் எனும் உயிர் காக்கும் மருந்துகள் தமிழகத்திற்கு தருவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து தமிழகத்தின் பிற மாவட்ட மருத்துவமனைக்கு தருவிக்கப்பட்டுக்கொண்டுள்ளது.
ஐசிஎம்ஆர் விதிகளை பின்பற்றுகிறோம். தொடர்பு தடமறிதல் முறைப்படி முதலமைச்சரே கொரோனா பரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொண்டார். பரிசோதனை முடிவு நெகட்டிவ் என்ற நல்ல செய்தி வந்திருக்கிறது. அதனால், நாங்கள் வெளிப்படையாக இருக்கிறோம். எல்லா தகவல்களையும் வெளிப்படையாக வெளியிடுகிறோம். களத்தில் நின்று போராடுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி மருத்துவமனை டீனுக்கு தொற்று என்றால் அவர்கள் 3 மாதம் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே களப்பணியாற்றுகிறார்கள். அவர்களின் பணி பாராட்டப்பட வேண்டியது. அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் குணப்படுத்திக்கொண்டு மீண்டும் வந்து பணியாற்றுகிறார்கள். தூய்மைப்பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல்துறையினர் என அனைவரும் தங்கள் உயிரை துச்சமாக நினைத்து மக்கள் நலனுக்காக பணியாற்றுகிறார்கள். நாங்கள் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறோம். கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி, கைகள் சுத்தம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். பொதுமக்களுடைய ஒத்துழைப்புடன் தமிழக அரசு கொரோனாவை வென்று காட்டும்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.