2 நாட்களாக தமிழகத்தில் கொரோனா விகிதம் குறைவு: மீண்டும் வந்தார் விஜயபாஸ்கர்

அரசின் மருத்துவமனை மேலாண்மை நடவடிக்கையின் மூலம், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு விகிதம் குறைந்து கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை தெரிவித்தார்.

By: Updated: April 15, 2020, 09:32:48 PM

அரசின் மருத்துவமனை மேலாண்மை நடவடிக்கையின் மூலம், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு விகிதம் குறைந்து கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை தெரிவித்தார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: “தமிழக அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து முதல்வர் பழனிசாமி கொரொனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறார். தமிழகத்தில் இதுவரை 17,835 நபர்களிடம் 21,994 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து இன்றுவரை ஒருநாள் மட்டும் 2,739 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 34 பேர் ஒரே தொற்றில் தொடர்புடைவர்கள். 4 பேர் தொடர்புகள் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 118 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து மருத்துவமனையில் அனுப்பப்பட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 26 பரிசோதனை மையங்கள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பரிசோதனை மையங்கள் உள்ளன.

கொரொனா வைரஸ் பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னையைச் சேர்ந்த 47 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இவருக்கு ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு இருந்தார். தனியார் மருத்துவமனையில் ஐசியுவில் இருந்த 59 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், தமிழகத்தில் கொரோனாவுக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஐசிஎம்ஆர், எய்ம்ஸ், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மருத்துவமனைகளுக்கும் அரசாணையாக அனுப்பப்பட்டது. மருத்துவமனை மேலாண்மையை கண்டிப்பாக பின்பற்றுவதால், கொரோனா இறப்பு விகிதம் நேற்று வரை .9 சதவீதம் இருந்தது. இன்று 1.9சதவீதமாக கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் வுஹானில் கொரோனா வைரஸ் பரவியபோதே, தமிழக முதல்வர் வல்லுனர்களை அழைத்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுத்தது. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெண்டிலேட்டர் போன்றவற்றை குறித்து விமர்சனம் செய்திருந்தார்.

ஆனால், மருத்து உற்பத்தியாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். கேரளாவில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 3பிளே முகக் கவசம் எல்லாம் வாங்கி வைகக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வந்தவுடன் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக 204 கோடி 85 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டன. என்95, 3 பிளே முகக் கவசம் எதுவும் தமிழகத்தில் தட்டுப்பாடு இல்லை. இதை மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக கூறுகிறேன்.” என்று கூறினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஊடகங்களை சந்தித்து கூறிவந்தார். பின்னர், திடீரென அவருகு பதிலாக கடந்த 2 வாரங்களாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழக கொரோனா நிலவரங்களை ஊடகங்களுக்கு தெரிவித்து வந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகமும் ஊடகங்களை சந்தித்து கொரோனா நிலவரங்களை கூறினார். இந்த நிலையில்,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மீண்டும் ஊடகங்களை சந்தித்து தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்று நிலவரங்களைக் கூறினார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உடன் இருந்தார். இப்படி, மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா நிலவரங்கள் பற்றி அறிவிக்க ஊடகங்கள் முன் வந்திருப்பது அரசியல் நோக்கர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Minister vijayabaskar says covid 19 patients death rate decreased in tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X