கொரோனா பாதிப்பை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகம் வந்துடைந்துள்ள நிலையில், அதன் விலை குறித்த திமுக தலைவர் ஸ்டாலினின் கேள்விக்கு மத்திய அரசு வாங்கிய விலையிலேயே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும், 49 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: உலக அளவில் 22 லட்சத்து 61 ஆயிரத்து நபர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கும் சூழலில் முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அரசின் தீவிரமான நடவடிக்கைகளை அனைவரும் அறிவீர்கள். சமூக விலகல், கை கழுவுதல், சுய சுத்தம், கிருமி நாசினி தெளித்தல் என அனைத்து தடுப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தொடந்து 3 நாட்களாக கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், கொரோனா தொற்று பாஸிட்டிவ் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது என்பது நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டுள்ளோம் என்பது நம்பிக்கையான தகவல். இன்று ஒரு நாளில் 5,363 பேருக்கு கொரோனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 35,036 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு 49 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என தொற்று உறுதி செய்யப்பட்ட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,372 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் மட்டுமே சற்று நோய் தொற்று தீவிரமாக உள்ளனர். மற்றவர்கள் நலமுடன் உள்ளனர். இன்றைக்கு கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 365 பேர் குணமடைந்துள்ளனர். இன்று கூடுதலாக கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 21 அரசு பரிசோதனை ஆய்வகங்கள், த்னியார் சார்பில் 10 என மொத்தம் 31 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. சென்னையில் ஒரு பரிசோதனை ஆய்வகத்தில் ஒரு நாளில் 1000 பரிசோதனை செய்யும் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதே போல, குணமடைந்தவர்களை வீட்டுக்கு அனுப்பியதிலும் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.1% விகிதம் உள்ளது. பரிசோதனை ஆய்வகங்களை அதிகப்படுத்தி 5,361 பரிசோதனை செய்யும் அளவுக்கு மாறியுள்ளோம். அதிக பரிசோதனை செய்தபோதும் கொரோனா பாஸிட்டிவ் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஏற்கெனவே தொற்று ஏற்பட்டவகளிடமிருந்துதான் அந்தப் பகுதியில்தான் தொற்று உறுதியாகி உள்ளது.
விரைவான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ் செய்யப்படுகிறது. இதனால், நாம் நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
சென்னையில் 7 பேரும், திருப்பூரில் 28 பேரும், கோவை 1, திண்டுக்கல், 3, திருநெல்வேலி 2, தஞ்சை 1, தென்காசி 4, பெரம்பலூர் 3 பேர்கள் என மொத்தம் 49 பேர் இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் முன்னோடியான அமைப்பு. முதல்வரின் உத்தரவின் பேரில் மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக டாக்டர் உமாநாத் ஐஏஎஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கொள்முதல் செய்தது பற்றிய விவரங்களைக் கூறுவார் என்று கூறினார்.
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குனர் உமாநாத் கூறுகையில், “
முதல்வரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த கோவிட்-19 தொற்று நோய் கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான பொருட்களை தமிழக அரசு போதிய அளவில் கொள்முதல் செய்து அனைத்து மருத்துவமனைகளுக்கு வழங்கிவருகிறது. ஆண்ட்டி பாடி டெஸ்டிங் கிட் பொருத்தவரை உங்கள் அனைவருக்கும் தெரியும். முதலில் நாம் அனைவருக்கும் பிசிஆர் கிட் டெஸ்ட் முறையில்தான் பரிசோதனை செய்துகொண்டிருந்தோம். அதற்குப் பிறகு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்யலாம் என்று ஐசிஎம்ஆர் அமைப்பு ஏப்ரல் 2-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. அதற்கு மறுநாள் இந்த கிட்களை வாங்குவதற்கான முயற்சிகளை எடுத்தார்கள். அதே வேளையில் இந்த டெஸ்ட் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதல்வரின் வழிகாட்டுதல்படி, மத்திய அரசு ஒப்புதல் அளிக்க அதே விலைக்கு அதே நிறுவனத்துக்கு நாங்களும் ஆர்டர் அளித்தோம். இதன் அடிப்படையில்தான் அவர்கள் நமக்கு 24,000 கிட் கருவிகள் நமக்கு சப்ளை செய்திருக்கிறார்கள். மத்திய அரசு ஆர்டர் செய்ததன் அடிப்படையில் அவர்கள் ஆர்டர் செய்த கிட்களில் இருந்து 12,000 கிட்களை நமக்கு அளித்திருக்கிறார்கள். இந்த 36,000 டெஸ்ட் கிட்களை வைத்துதான் நாம் சோதனை செய்திருக்கிறோம்.
மத்திய அரசு 15 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் ஆர்டர் செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. தமிழக அரசு 5 லட்சம் கிட் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஒவ்வொரு பேட்சிலும் தயார் செய்து தரக் கட்டுப்பாடு செய்து வெளியிடுகிறார்கள். இந்தியாவுக்கு வந்த முதல் பேட்சில் 3 லட்சம் கிட்கள் வந்துள்ளன. அதில் தமிழக அரசு ஆர்டர் செய்த கிட்களில் 24,000 கிட் வாங்கியுள்ளோம். மத்திய அரசு 12,000 கிட் வழங்கியுள்ளது. தமிழக அரசு செய்திருக்கும் ஆர்டரும், மத்திய அரசு செய்திருக்கும் ஆர்டரும் மற்ற மாநிலங்கள் செய்திருக்கு ஆர்டரும் படிப்படியாகத்தான் வரும். 5 லட்சம் கிட் ஆர்டர் செய்தால் உடனடியாக வந்துவிடாது. ஏனென்றால், எல்லோருக்கு அந்த கிட் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்ச் பேட்ச்சாக நமக்கு கொடுக்கிறார்கள்.
இந்திய அரசு நிர்ணயித்துள்ள அதே விலைக்குதான் நாம் வாங்கியுள்ளோம் என்று கூறினார்.
என்ன விலைக்கு ரேபிட் டெஸ் கிட் கருவி வாங்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த உமாநாத், “மத்திய அரசு ஆர்டர் செய்தது ஏப்ரல் 3-ம் தேதி. அதற்குப் பிறகு பல மாற்றங்கள் இந்த நிலையில் நிகழ்ந்துள்ளது. நாம் ஆர்டர் செய்தபோது இருந்த கம்பெனிகள் மிகவும் குறைவு. அதனால், மத்திய அரசும் நாமும் பிக்ஸ் பண்ண ரேட் அன்றைக்கு அதிகம். சட்டீஸ்கர் ஆர்டர் செய்துள்ள கம்பெனி நாம் ஆர்டர் செய்தபோது இருந்த கம்பெனிகளில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலேயே இல்லை. அதற்குப் பிறகுதான் அவர்களுக்கு அனுமதி வந்துள்ளது. இந்த கருவி வாங்கும்போது மத்திய அரசு கஸ்டம்ஸ் வரியை குறைத்திருக்கிறார்கள். அதனால், விலை கம்மியாகத்தான் இருக்கும். அதனால், தமிழக அரசு அதிக விலைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை கொள்முதல் செய்துவிட்டார்கள் என்று சொல்வது தவறான ஒரு கருத்து. மத்திய அரசு எந்த நிறுவனத்திடம் எந்த விலைக்கு வாங்கியிருக்கிறார்களோ அதே விலைக்குதான் நாமும் வாங்கியுள்ளோம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பேசுவது சரியில்லை. ஒருவேளை அதன் பிறகு தமிழக அரசு மேலும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை ஆர்டர் செய்தால் அப்போது அவர்களைவிட குறைவாகக்கூடா ஆர்டர் செய்யலாம். அதனால், அந்த மாநிலத்தினர் அதிக விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது.” என்று கூறினார்.
இதனிடையே தமிழக அரசு, ரேபிட் டெஸ்ட் கிட் கருவியி ரூ.600-க்கு வாங்கியதாக தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அரசு வாங்கிய விலைக்கே வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.