திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை, திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் புகழ்ந்து துதி பாட தொடங்கியுள்ளனர்.
உதயநிதியை புகழ்வது திமுக நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல், சட்டபேரவையிலும் ஆரம்பித்துள்ளது. இளைஞர்களின் இளையநிலா அண்ணன் உதயநிதி அவர்களே என பெண் எம்.எல்.ஏ ஒருவர் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
இன்னொரு எம்.எல்.ஏ, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக 159 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த 16 ஆவது சட்டமன்ற பேரவையில் இருக்கிறார்கள். அதற்காக அரும்பாடுப்பட்ட எங்களுடைய இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என உதயநிதியை சட்டமன்றத்தில் புகழ்ந்துள்ளார்.
இளைஞரணிச் செயலாளர், சேப்பாக்கம் மேன் ஆஃப் தி மேட்ச், ஆட்டம் தொடக்கம் முதல் இறுதி வரை இந்த தேர்தல் களத்தில் சுழன்று சுழன்று பணியாற்றியவர் உதயநிதி. உதயசூரியன் சின்னத்தில் கடந்த 2016 தேர்தலில் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த தேர்தலில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பீர்களா என மக்களிடம் கேட்டார் உதயநிதி ஸ்டாலின். அவர்கள் என்னை 47,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளார்கள். அதற்கு எங்களுடைய இளைஞரணிச் செயலாளருக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என மற்றொரு எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் தேர்தல் வெற்றிக்கு உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக அமைச்சர் சேகர் பாபு, ஒரு நிகழ்ச்சியில், சிறந்த சட்டபேரவை உறுப்பினர் என்று போட்டிவைத்தால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவிலே சிறந்த சட்டமன்ற உறுப்பினர் எங்கள் ஆருயிர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் தான் என்றால் அது மிகையாகாது. இது வார்த்தைக்காக அல்ல நான் மனதிலே பட்டதை துணிவாக தெளிவாக எடுத்துக் கூறுபவன் என்று பேசியுள்ளார். உதயநிதி சட்டமன்ற உறுப்பினர் ஆகி 2 மாதம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியும் உதயநிதியை புகழ்ந்து பேசியுள்ளார். தேர்தல் பிரச்சாரங்களின் போது புகழ்ந்தவர், தற்போது ஆட்சி அமைத்த பிறகு சட்டமன்றத்திலும் உதயநிதியை புகழ்ந்து பேசி வருகிறார்.
சட்டமன்றத்திலும் கொறடாவுக்கு அடுத்த இடத்தில் உதயநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், கொறடாவுக்கு அடுத்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் வரிசையில் உதயநிதிக்கு முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் உதயநிதியை புகழ்ந்து வருவது, கடந்த அதிமுக ஆட்சியில் எப்படி அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்களோ, அந்த நாட்கள் மீண்டும் வருகிறதோ என்ற சந்தேகம் வருகிறது.
அதிமுக ஆட்சியைப் போல் அல்லாமல், ஏன் திமுகவின் கடந்த ஆட்சியை போல் அல்லாமல் புதுவிதமாக இந்த ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இப்படி தனிநபர் துதி, அதுவும் முதல்வரின் மகனை புகழ்ந்து வருவது ஆட்சிக்கு சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஒருவேளை கட்சியின் எதிர்காலம் அவர்தான் என்பதால் இப்பவே நெருக்கமாகி விடலாம் என்று நினைக்கிறார்களா? இத்தகைய புகழுரைகளுக்கு உதயநிதி இதுவரை எதுவும் சொல்லவில்லை என்பதால், அதை அவர் விரும்புகிறாரா? என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil