/indian-express-tamil/media/media_files/2025/04/20/ZSobtUnNFwjtrNgefCid.jpg)
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் விசைத்தறியாளர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் கோவை திருப்பூர் பல்லடம் அவிநாசி பகுதிகளை சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர்.
கோவை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கேட்டு 33 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களாக சோமனூர் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக, சிபிஎம், பாஜக உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் விசைத்தறியாளர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதில் கோவை திருப்பூர் பல்லடம் அவிநாசி பகுதிகளை சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த பேச்சுவார்த்தையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், கோவை மேயர் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பூபதி, எங்கள் கோரிக்கை சம்பந்தமாக பல கட்ட பேச்சு வார்த்தைகள் இரண்டு மாவட்ட ஆட்சியாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டுள்ள , நிலையில் இறுதியாக அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்னிலையில் இன்று நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில், பல்லடம் ரகங்களுக்கு 10% சோமனூர் ரகங்களுக்கு 15% கூலி உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 2022 ஒப்பந்தத்தில் இருந்து இந்த உயர்வு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்த அவர் எனவே நாங்கள் எங்களுடைய உண்ணாவிரத போராட்டம் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தார். நாளை எங்களுடைய பொதுக்குழு கூடி முடிவு செய்து எங்கள் போராட்டத்தை விளக்கிக் கொள்வோம் எனவும் கூறினார். தமிழக அரசும் முதலமைச்சரும் தங்கள் கோரிக்கையில் கவனம் செலுத்தி ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்த அவர் இந்த 33 நாட்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சாமிநாதன், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற , அடிப்படையில் இன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதாகவும், எனவே இந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். உற்பத்தியாளர்களும் அரசின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தொடர்ந்து இவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க இரு மாவட்ட ஆட்சியர்களும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்து கிளம்பும் பொழுது அமைச்சர் செந்தில் பாலாஜி விசைத்தறிவாளர்களை ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசி புறப்பட்டார்.
0
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.