மிக் ஜாம் புயல் மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை மண்டலத்துக்கு உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சு. முத்துசாமியும், தாம்பரத்துக்கு ர.சக்கரபாணியும், ஆவடிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் ஆகிய பகுதிகளுக்கு எஸ்.எஸ்.சிவசங்கரும், வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கத்துக்கு எ.வ.வேலுயும், சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சி.வெ. கணேசனும், திருவள்ளூர் பகுதிக்கு பி. மூர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
தற்போது புயல் ஆந்திரா மாநிலம் அருகே நிலைகொண்டுள்ளது. வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“