ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ஜனவரி, 2025 முதல் மாதம் தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. ரூ. 2 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் இருக்கக்கூடாது, குடும்பத்தில் அரசு ஊழியர்கள் யாரும் இருக்கக்கூடாது, 4 சக்கர வாகனங்கள் சொந்தமாக இருக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதியுள்ள 1.15 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ 1000 செலுத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்து, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 1.62 கோடி பேருக்கு மாதந்தோறும் ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அரசின் சில நிபந்தனைகளால் தாங்கள் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாத நிலை உள்ளதாகக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் ஜனவரி, 2025 முதல் மாதம் தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த் துறை கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புதன்கிழமை (நவம்பர் 13) தொடங்கி வைத்தார்.
கஞ்சநாயக்கன்பட்டியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், சுக்கில நத்தம் கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மீனாட்சிபுரம் மற்றும் ஆமணக்கு நத்தம் கிராமத்தில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும், ரூ.21 லட்சம் மதிப்பில் புதிதாக பைப்லைன் அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து, குருந்தமடத்தில் ரூ 20 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும் ரூ. 14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “கலைஞர் உரிமைத் தொகை சிலருக்கு விடுப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். அது போல், முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். எனக்கு ஆயுள் உள்ளவரை இந்த தொகுதிக்காக உழைத்துக் கொண்டே இருப்பேன். கடவுள் என்னை எத்தனை நாட்கள் ஓடவிடுகிறாரோ அத்தனை நாட்களுக்கு நான் உங்களுக்காக ஓடிக் கொண்டே இருப்பேன்” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
மேலும், கலைஞர் மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவரின் விண்ணப்பங்களையும் பரிசீலித்து தகுதி உள்ள அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு. ரேஷன் கார் உள்ள அனைவருக்கும் மகளிர் உதவித்தொகை என்று பேசிய தகவல் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“