தமிழின் அருமை தெரிந்தவர்களுக்கு தான் அதன் முக்கியத்துவம் புரியும் என்று, மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள அனு க்ரீத்தி தெரிவித்துள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பிரெஞ்ச் இலக்கியம் படித்து வரும், திருச்சியைச் சேர்ந்த மாணவி அனுக்ரீத்தி, மிஸ் இந்தியா பட்டம் வென்றார். அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டிலிருந்து தான் மிஸ் இந்தியா அழகியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
சீனாவில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் வெற்றி பெறுவதற்காக எனது முழுகவனத்தையும் செலுத்தி வருகிறேன். அழகிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் செல்வந்தர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஆனால் நான் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண். தமிழ் இலக்கண, இலக்கிய வளம் கொண்ட மொழி. அதன் அருமை தெரிந்தவர்களுக்குத்தான் முக்கியத்துவமும் புரியும்.
அழகிப் போட்டி என்பது அழகோடு மட்டும் தொடர்புடையது அல்ல. நீங்கள் யார், உங்களது செயல்கள் என்ன என்பதையும் அது பொறுத்தது. மிஸ்.இந்தியா என்பவர் என்னை பொறுத்தவரை உதவும் எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களைப் பற்றிய கண்ணோட்டத்தை மாற்ற பாடுபட்டு வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, உலக அழகிப் போட்டிக்குப் பின்னரே, எனது படிப்பை தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.