scorecardresearch

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவு என ஜே.பி.நட்டா பேச்சு; தி.மு.க கூட்டணி கட்சிகள் விமர்சனம்

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவுபெற்றதாகவும், தி.மு.க தலைவர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்றும் ஜே.பி.நட்டா பேச்சு; தி.மு.க கூட்டணி கட்சிகள் கண்டனம்

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவு என ஜே.பி.நட்டா பேச்சு; தி.மு.க கூட்டணி கட்சிகள் விமர்சனம்

Arun Janardhanan 

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் இரண்டு நாள் தமிழ்நாட்டுப் பயணமானது, எய்ம்ஸ் திட்டம் தொடர்பாக அவர் கூறிய பொய்யான தகவல்களால், தி.மு.க தலைமையிலான ஆளும் கூட்டணியின் கேலிகளுக்கு ஆளாகி, அதன் தொடர்ச்சியாக வார்த்தைப் போரை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.பி.நட்டாவின் வருகை, வெள்ளிக்கிழமை முடிவடைந்தது, இந்த வருகை பா.ஜ.க,வின் 2024 தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கான முன்னோடியாகக் கூறப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த முறை பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை தோற்கடித்து வெற்றி பெற்ற தொகுதி இது என்பதால் ஜே.பி.நட்டா வருகையின் ஒரு இடமாக சிவகங்கையின் தேர்வும் குறிப்பிடத்தக்கது. ஹெச்.ராஜா இங்கிருந்து மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்பட்டாலும், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சிக்கு அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி.. மீறினால் நடவடிக்கை: ஐகோர்ட்

இருப்பினும், மதுரை எய்ம்ஸ் திட்ட பணிகள் 95% நிறைவடைந்ததாக வியாழக்கிழமை மதுரையில் தொழில்துறையினர் மற்றும் சில முக்கிய பிரமுகர்களிடம் ஜே.பி.நட்டா ஆற்றிய உரையால் பா.ஜ.க.வின் திட்டங்கள் சற்று வலுவிழந்தன.

ஜே.பி.நட்டா உரைக்கு பின்னர் மிக விரைவில், மதுரை மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள், சி.பி.எம்., கட்சியின் சு.வெங்கடேசன் மற்றும் காங்கிரசின் மாணிக்கம் தாகூர் (இருவர் சார்ந்த கட்சிகளும் மாநிலத்தில் ஆட்சியில் கூட்டணியில் உள்ளன), மதுரை அருகே உள்ள ஆஸ்டின்பட்டியில் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். அங்கே ஒரு சுற்றுச் சுவர் இருந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகள் எங்கு நிறைவடைந்துள்ளது என்று கேட்கும் பதாகைகளை இரு எம்.பி.,க்களும் ஏந்தியிருந்தனர்.

ஜே.பி.நட்டா உரையில், 1,264 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாகக் கூறுவதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார்: “இன்று எய்ம்ஸில் 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. இது விரைவில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும்.”

மதுரையில் சர்வதேச விமான நிலையத்திற்கு ரூ.550 கோடி ஒதுக்கப்பட்டது குறித்தும் பேசிய ஜே.பி.நட்டா, அதில் தாமதம் ஏற்பட்டதற்கு மாநில அரசுதான் காரணம் என்று சுட்டிக்காட்டினார். “633 ஏக்கர் நிலம் தேவை, ஆனால் தமிழக அரசு 543 ஏக்கர் மட்டுமே கொடுத்துள்ளது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் உருவாக்கவும், சிறந்த இணைப்பு மற்றும் தளவாட வசதிக்காகவும் தமிழக அரசு எங்களுக்கு நிலத்தை வழங்குமா என இன்னும் காத்திருக்கிறோம்,” என்றும் ஜே.பி.நட்டா கூறினார்.

வெள்ளிக்கிழமை எய்ம்ஸ் தளத்திற்குச் சென்ற சி.பி.எம் எம்.பி சு.வெங்கடேசன், கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர் ரூ. 1,200 கோடி மதிப்பீட்டில் இருந்து ஒட்டுமொத்த செலவு ரூ.1,900 கோடியாக மாற்றியமைக்கப்பட்ட பின்னர், திட்டம் உண்மையில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்று கூறினார்.

“திட்டத்திற்கான டெண்டர்கள் காலதாமதம் ஆவதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் இதை ஒரு காரணம் என்று குறிப்பிட்டுள்ளது,” என்று கூறிய சு.வெங்கடேசன், திட்டம் நிறைவடைந்துவிட்டதாகவும், பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கப் போகிறார் என்றும் ஜே.பி.நட்டா எவ்வாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

மதுரை விமான நிலையம் தொடர்பான ஜே.பி.நட்டாவின் கூற்றுகள் குறித்து கேள்வி எழுப்பிய சு.வெங்கடேசன், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த அறிக்கைகளை முன்பே மறுத்துவிட்டது என்று கூறினார்.

தோப்பூர் எய்ம்ஸ் உள்ள நாடாளுமன்ற தொகுதியான விருதுநகரின் லோக்சபா உறுப்பினராக இருந்து, 95% பணிகளை மகிழ்ச்சியுடன் பார்க்க மதுரை வந்ததாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்துள்ளார். தளத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், தாகூர் கூறினார்: “முன்னாள் சுகாதார அமைச்சர் (ஜே.பி.நட்டா) இப்படிப் பொய் சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது… இப்படிதான் (பா.ஜ.க) தமிழக மக்களை ஏமாற்றுகிறது, துரோகம் செய்கிறது.”

காங்கிரஸின் கரூர் எம்.பி., ஜோதிமணி. “மதுரை எய்ம்ஸ்: இருந்த செங்கல் கூட காணவில்லை!”

நடந்ததற்கு ஜே.பி.நட்டா காரணம் இல்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். மேலும், “எய்ம்ஸ் திட்ட நிலையைப் பற்றி யாரோ அவருக்குத் தவறாகச் சொல்லியிருக்கிறார்கள், அது மோசமாகப் அடிவாங்கியுள்ளது.” சிவகங்கையை மீண்டும் வெல்வதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. “இது (ஜே.பி.நட்டாவின் பேரணி) அடிப்படையில் காங்கிரஸிடம் இருந்து மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆகும்,” என்று அவர் கூறினார்.

வியாழன் அன்று காரைக்குடியில் நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில், தி.மு.க தலைவர்கள் “படிக்காதவர்கள்” என்றும், அதை ஒரு வாரிசுக் கட்சி என்றும் விமர்சித்த ஜே.பி.நட்டாவின் கருத்துக்கள் தி.மு.க.,வை புண்படுத்தியது.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வை தி.மு.க எதிர்ப்பதாக என்னிடம் கூறப்பட்டது. “படிப்பறிவில்லாத தலைவர்கள் விவகாரங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்போது… அவர்கள் கல்வியைப் பற்றி பேசும்போது இதுதான் நடக்கும்,” என ஜே.பி.நட்டா கூறினார்.

மேலும், வளர்ச்சி பற்றி தி.மு.க பேசலாமா? அவர்களின் D என்பது வாரிசு அரசியலையும், M என்பது பண மோசடியையும், K என்பது கட்ட பஞ்சாயத்தையும் குறிக்கிறது… வளர்ச்சியில் தி.மு.கவின் பங்களிப்பு என்ன? அவர்கள் வெறுப்பையும் பிரிவையும் நம்புகிறார்கள், அதைப் பற்றி அவர்களிடம் தெளிவான பார்வை இல்லை. கருத்தியல் ரீதியாக தி.மு.க ஒரு பெரிய பூஜ்ஜியம், என்றும் ஜே.பி.நட்டா கூறினார்.

நீட் தேர்வால் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர முடிந்தது என்றும், “பிராந்திய மொழிகளில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியவர் நரேந்திர மோடி” என்றும் ஜே.பி.நட்டா கூறினார்.

தமிழக நிதியமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான பழனிவேல் தியாகராஜன், தனது பதிலடி மற்றும் அவரது ஈர்க்கக்கூடிய கல்வி பின்னணிக்கு பெயர் பெற்றவர், இந்த கருத்துக்கள் தொடர்பாக உடனடியாக பதிலடி கொடுத்தார். “இரு நாடுகளில் உள்ள 3 பல்கலைக்கழகங்களில் இருந்து 4 வெவ்வேறு மேஜர்களில் 4 டிகிரி, பல சர்வதேச தரப்படுத்தப்பட்ட சோதனைகளை முடித்த பிறகு, இன்னும் ‘படித்தவர்களுக்கான’ JPN (ஜே.பி.நட்டா) இன் கட்-ஆஃப்-க்கு தேர்ச்சி பெற முடியவில்லை.” “முழு அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தால், ஒருவேளை நான் கட் – ஆஃப்பில் தேர்ச்சி பெற்றிருக்கலாம்,” என்று பழனிவேல் தியாகராஜன் ட்வீட் செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Missing madurai aiims bjp chief nadda hits a wall tonne of bricks after complete claim