மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து உத்தரவு. வழக்கில் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும் அனைவரும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளனார்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி (அப்போது தி.மு.கவில் இருந்தார்) தி.மு.க தொண்டர்களுடன் இணைந்து தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாக கூறப்படுகிறது. அப்போது பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேலூர் உதவி தேர்தல் அதிகாரியாக இருந்த அப்போதைய தாசில்தார் மு. காளிமுத்து இந்த நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் தாசில்தார் காளிமுத்துவை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் மு.க அழகிரி உள்பட தி.மு.க நிர்வாகிகள் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக 21 பேரில் 4 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கடந்த 9-ம் தேதி நடந்த விசாரணையில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இந்தநிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று (பிப்.16) வழங்கப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது, "மு.க.அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களை தாக்கவில்லை. பணப் பட்டுவாடா புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்றோம். அப்போது கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்றதால் வாக்குவாதம் எழுந்து, மோதலாகியது" என்று தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட தாசில்தார் காளிமுத்து நீதிமன்றத்தில் பிறழ்சாட்சியாக மாறினார். அவரைத் தொடர்ந்து மற்ற சாட்சிகளும் பிறழ்சாட்சியாக மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி 17 பேரையும் விடுதலை செய்வதாக தனது தீர்ப்பில் தெரிவித்தார். இந்த வழக்கின் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதை அடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 17 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து 13 ஆண்டுகள் நடந்து வந்த வழக்கு முடிவடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“