திருப்பரங்குன்றத்தில் தயா அழகிரி போட்டியா? மு.க.அழகிரி சூசகம்

தயாநிதி அழகிரியும் சமீப நாட்களாக அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தயா அழகிரி போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. மு.க.அழகிரி இன்று அளித்த பேட்டி சூசகமாக அதை கூறுகிறது.

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு முதல் சவால் இதுதான்!

அதேசமயம் மு.க.அழகிரி வெளிப்படையாக திமுக.வுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். கருணாநிதி மறைவுக்கு பிறகு தன்னை திமுக.வில் இணைத்துக்கொள்ள மு.க.ஸ்டாலின் முன் வருவார் என அழகிரி எதிர்பார்த்தார். ஆனால் அது நடக்கவில்லை.

செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்துவதாக மு.க.அழகிரி அறிவித்திருக்கிறார். இதில் பெருமளவில் தொண்டர்களை திரட்டி பலம் காட்டுவதுதான் அவரது திட்டம்! இதன் மூலமாக திமுக.வுக்கு அவர் நெருக்கடி கொடுக்கிறார்.

செப்டம்பர் 5-ம் தேதி பேரணி தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 26) 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் அது குறித்து நிருபர்கள் அழகிரியிடம் கருத்து கேட்டனர்.

அதற்கு மு.க.அழகிரி, ‘அவருக்கு என்னை முன்மொழியச் சொல்கிறீர்களா?’ என காமெடியாகக் கேட்டார். தொடர்ந்து, ‘இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானால், நாங்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வோம்’ என்றும் கூறினார் அழகிரி!

இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி மதுரை மாவட்ட எல்லைக்குள் வருகிறது. இங்கு அழகிரி ஆதரவாளர்கள் கணிசமாக இருக்கிறார்கள். தேவைப்பட்டால் தனது மகன் தயாநிதி அழகிரியை இங்கு களம் இறக்கவும் அழகிரி தயங்கமாட்டார் என அவரது அழகிரி ஆதரவாளர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.

தயாநிதி அழகிரியும் சமீப நாட்களாக அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் பற்றி அவர் வெளியிட்ட கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.

அவரை திருப்பரங்குன்றத்தில் நிறுத்தினால் கணிசமான வாக்குகளை பெற்று திமுக.வுக்கு தனது பலத்தை நிரூபித்துக் காட்டலாம் என அழகிரி கருதுவதாக கூறப்படுகிறது. கருணாநிதி ஆக்டிவாக இருந்த காலகட்டத்திலேயே 2001 தேர்தலில் மதுரை வட்டாரத்தில் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி பிடிஆர் பழனிவேல்ராஜன் உள்ளிட்டவர்களுக்கு அழகிரி குடைச்சல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, ‘வேட்புமனுத் தாக்கல் செய்வோம்’ என அழகிரி கூறியிருப்பதை சுலபமாக யாரும் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை. ஆதரவாளர்களை தொடர்ந்து சந்திக்கும் அழகிரி செப்டம்பர் 5-ம் தேதி அதிரடி அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close