மு.க.அழகிரி 2-வது நாளாக இன்று மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். மெரினா பேரணி தனது பலத்தை காட்டும் என்றார் அவர்!
மு.க.அழகிரி, திமுக.வுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பியபடி இருக்கிறார். கருணாநிதி மறைவைத் தொடர்ந்து தன்னை கட்சிக்குள் இணைப்பார்கள் என எதிர்பார்த்தார் மு.க.அழகிரி. அது நடைபெறாததால், அவரது ஆவேசம் அதிகரித்திருக்கிறது.
கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் மெரினாவில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி நடத்தவிருப்பதாக அழகிரி அறிவித்திருக்கிறார். இரங்கல் ஊர்வலம் என்பதைவிட, இது அழகிரியின் பலத்தை வெளிப்படுத்தும் ஊர்வலமாக மதிப்பிடப்படுகிறது.
செப்டம்பர் 5-ம் தேதி ஊர்வலத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்களை திரட்டுகிறார் மு.க.அழகிரி. இது தொடர்பாக மதுரை சத்ய சாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த இரு தினங்களாக ஆதரவாளர்களை அழைத்து ஆலோசித்து வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தென் மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகிகள் பலர் பங்கேற்று வருகிறார்கள். இன்று (ஆகஸ்ட் 25) 2-வது நாளாக அவரது ஆலோசனை நீடித்தது. அவரது ஆதரவாளர்களான மன்னன், கோபிநாதன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மு.க.அழகிரி தனது ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ‘நான் திமுக.வில் இல்லை. திமுக செயற்குழு பற்றி என்னிடம் ஏன் கேட்குறீங்க? தலைவர் இருக்கும்போதே தலைமைப் பதவிக்கு நான் ஆசைப்பட்டதில்லை.
அண்ணா, கலைஞர் ஆகியோர் வளத்த கட்சியில் சேருவதற்காக நான் கதவை தட்டுவதில் தவறில்லை.’ என்ற அழகிரியிடம், ‘2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் உங்களை கட்சியில் சேர்க்காவிட்டால் திமுக.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அழகிரி, ‘ஸ்டாலின் செயல் தலைவரான பிறகு எத்தனை தேர்தல்களில் திமுக ஜெயித்திருக்கிறது? 2014-க்கு பிறகு எந்தத் தேர்தலிலும் திமுக ஜெயிக்கவில்லை.’ என்றார்.
செப்டம்பர் 5-ம் தேதி பேரணி எனது பலத்தை நாட்டு மக்களுக்கு கூறுவதாக இருக்கும். சென்னையில் ஒரு திருமணத்திற்கு தேதி கொடுத்துவிட்டு ரத்து செய்த ஸ்டாலின், இப்போ அவசர அவசரமாக தலைவர் பதவியை ஏற்கப் போகிறார்.’ என்றார் அழகிரி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.