scorecardresearch

மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கே திமுக.வில் பதவி : தோல்விக்கு அழகிரி கூறும் காரணம்

மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின் பின்னால் விசுவாசமான நிர்வாகிகள் இல்லை. அதுவும் ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணம்’ என்றார்.

MK Alagiri, MK Stalin, M.Karunanidhi, DMK
MK Alagiri, MK Stalin, M.Karunanidhi, DMK

மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின் பின்னால் விசுவாசமான நிர்வாகிகள் இல்லை. அதுவும் ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணம்’ என்றார்.

மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிரடியாக அரசியல் பட்டாசுகளை கொளுத்திப் போட ஆரம்பித்திருக்கிறார். ‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெற முடியாது’ என கூறியிருக்கிறார்.

மு.க.அழகிரியிடம் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து கேட்டதற்கு, ‘தினகரன் வெற்றி பெற்றிருக்கிறார். அதைப் பற்றி சொல்ல வேறு ஒன்றுமில்லை’ என கூறியிருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு திமுக குறைவான வாக்குகள் வாங்கியது குறித்து கருத்து கூறிய அழகிரி, ‘தேர்தலில் எந்த வேலையும் செய்யாமல் எப்படி வெற்றி பெற முடியும்? ‘பண நாயகம் வென்று விட்டது, தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது, குதிரை பேரம் என சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. திமுக நிர்வாகிகளுக்கு கட்சியினரை ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்றத் தெரியவில்லை. வெற்றி தானாக வந்துவிடும் என நினைக்கிறார்கள்’ என்றார் அழகிரி.

தொடர்ந்து பேசிய அழகிரி, ‘ஆர்.கே.நகர் என்றில்லை. இனி எந்தத் தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது. இந்த செயல் தலைவர் இருக்கும் வரைக்கும் அதற்கான வாய்ப்பு இல்லை. தலைவர் ஆக்டிவாக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கட்சியை வழிநடத்துபவரின் பின்னால் விசுவாசமான நிர்வாகிகள் இல்லை.

அதிமுக.வில் இருந்து வந்தவர்களுக்கும் மதிமுக.வில் இருந்து வந்தவர்களுக்கும் கட்சிப் பதவிகளை கொடுத்தனர். இப்படி இருந்தால் கட்சியால் எப்படி வெற்றி பெற முடியும்? திமுக.வுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் எதிலும் தொண்டர்கள் இல்லை. அதிலும் கருப்புத் துண்டும் கருப்புச் சட்டையும் கூடவே இருந்தால் வெற்றி பெறவே முடியாது.

வைகோ என்னை சந்தித்ததால் என் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறினார்கள். கலைஞரை அவர் பார்க்கச் சென்றபோது கல்லால் அடித்தார்கள். பிறகு முரசொலி விழாவுக்கு அழைத்தார்கள். அவர் இப்போது, ‘ஸ்டாலின் அடுத்த முதல்வர் ஆவார்’ என்கிறார். இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? இதே வைகோ தலைவர் கலைஞரை எவ்வளவு இழிவாக பேசினார்? ஆளுக்கொரு நியாயம்?

ஆர்.கே.நகரில் செயல் தலைவரின் குடும்பத்தினர் சிபாரிசால் வேட்பாளரை தேர்வு செய்திருக்கிறார்கள். முதலியார் சாதிக்காரர் என்ற அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறார்கள். திமுக.வில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் வேலை செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதை மறைத்து, ‘திமுக.வினர் விலை போய்விட்டார்கள்’ என துரைமுருகன் கூறுவது கட்சியினரை அவமானப்படுத்தும் செயல்!

இதற்காக துரைமுருகனுக்கு எதிராக கட்சியினர் கருப்புக்கொடி காட்டியிருக்க வேண்டும். துரைமுருகன் திமுக.வினரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். வேண்டுமானால் துரைமுருகன் போன்றவர்கள் பணம் வாங்கியிருக்கலாம். வெற்றி பெற்ற தினகரனுக்கு ராதாரவி வாழ்த்து கூறுகிறார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இது போன்றவர்களுக்குத்தான் திமுக.வில் பதவி கொடுத்து மரியாதை செய்கிறார்கள்.

சுய நலத்துடன் கட்சியில் இருப்பவர்களை மாற்ற வேண்டும். உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு பொறுப்பு வழங்க வேண்டும். அதெல்லாம் இப்போது நடக்குமா? என்று தெரியவில்லை. கட்சியில் உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என சுட்டிக் காட்டியதால் என்னை கட்சியை விட்டு நீக்கினார்கள். நான் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்றால், என்னிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என பேட்டியில் கூறியிருக்கிறார் அழகிரி.

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Mk alagiri mk stalin m karunanidhi dmk

Best of Express