மு.க.அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான கருத்துகளை தெரிவித்தார். ஸ்டாலின் பொறுப்பில் இருந்தால் திமுக ஜெயிக்காது என்கிறார் அவர்.
மு.க.அழகிரி, திமுக.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர்! மத்திய அமைச்சராகவும் இருந்தார். திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்ற அடிப்படையில் அவருக்கு ஆதரவாளர்கள் உருவாகினர்.
மு.க.அழகிரி, 2014 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக.வில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை விலக்கிக் கொண்டார். உச்சகட்டமாக கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதிக்கும் மு.க.அழகிரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை கட்சியை விட்டு திமுக தலைமை நீக்கியது.
மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி அண்மையில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘திமுக தொண்டர்கள் ஆர்.கே.நகரில் பணத்திற்கு விலை போய்விட்டதாக கூறிய துரைமுருகன் மீது தலைமை நடவடிக்கை எடுக்குமா?’ எனக் கேட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (டிசம்பர் 27) மு.க.அழகிரியின் கொந்தளிப்பு வெளியாகியிருக்கிறது.
மு.க.அழகிரியின் பேட்டியைத் தாங்கி இன்று வெளியான வாரமிருமுறை இதழ் ஒன்றில், ‘ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக எந்தத் தேர்தலிலும் ஜெயிக்க முடியாது’ என கூறியிருக்கிறார் அழகிரி. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக டெப்பாசிட் இழந்ததை சுட்டிக்காட்டியே இந்தக் கருத்தை அழகிரி பதிவு செய்திருக்கிறார். ஸ்டாலினின் தேர்தல் பணி செயல்பாடுகள், தலைமைப் பண்பு குறித்து விவாதங்கள் நடக்கும் நிலையில், அழகிரியின் இந்த கருத்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மு.க.அழகிரி கடந்த பல மாதங்களாகவே அரசியல் ரீதியான கருத்துகளை வெளிப்படுத்தாமல் அமைதி காத்து வந்தார். திடீரென இப்போது அவர் அதிரடியாக பேச ஆரம்பித்திருப்பது திமுக.வுக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.