மு.க.அழகிரி இன்று திடீரென அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் சந்திப்பு நடத்தியது மதுரையில் ‘ஹாட் டாக்’ ஆனது. எனினும் இந்த சந்திப்பு, ‘நீங்கள் நினைப்பது போல ஒன்றும் இல்லை’ என்றார் அழகிரி!
மு.க.அழகிரி மதுரையை மையமாகக் கொண்டு அரசியல் நடத்தி வருபவர்! மதுரையில் சர்வகட்சிகளின் அரசியல்வாதிகளுடன் நெருக்கத்தை அதிகரித்து வருகிறார் அழகிரி.
அண்மையில் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான செல்லூர் ராஜூ அளித்த ஒரு பேட்டியில், ‘திமுக.வுக்கு அழகிரி தலைவர் ஆகியிருந்தால்கூட நாங்கள் கவலைப்பட்டிருப்போம். அவர் வேகமாக செயல்படக்கூடியவர். ஸ்டாலின் தலைவர் ஆனதால் எங்களுக்கு கவலை இல்லை’ என்றார்.
மு.க.அழகிரியின் திறமையை மெச்சும் விதமாக செல்லூர் ராஜூ கொடுத்த இந்தப் பேட்டி அழகிரி ஆதரவாளர்களை குஷிப்படுத்தியது. இந்தச் சூழலில் இன்று (செப்டம்பர் 13) காலையில் திடீரென செல்லூர் ராஜூவை அவரது இல்லத்திற்கு சென்று அழகிரி சந்தித்தார்.
ஜெயலலிதா காலத்தில் திமுக சார்ந்த யாரிடமும் நெருங்காதா அதிமுக பிரமுகர்கள் தற்போது அரசியல் நாகரீகம் பேண ஆரம்பித்திருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த வகையில்தான் செல்லூர் ராஜூ வீட்டுக்கு சென்ற அழகிரி, அண்மையில் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் இறந்ததையொட்டி துக்கம் விசாரித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் நிருபர்களிடம் பேசிய மு.க.அழகிரி, ‘செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்கவே வந்தேன். நீங்கள் நினைப்பது போல வேறு ஒன்றும் இல்லை’ என குறிப்பிட்டார்.