மு.க.அழகிரி அதிரடி: ‘தேர்தல் வந்தால் திமுக.வில் இருந்து பலர் வெளியே போவார்கள்’

மன்னனும், அவரது நண்பர்களும் என்னிடம் பதவிக்காக இல்லை. ஆனால் அங்கே (தி.மு.க.) இருப்பவர்கள் அப்படி அல்ல.

மு.க.அழகிரி திமுக.வுக்கு நெருஞ்சி முள்! நேரம் கிடைக்கிற போதெல்லாம் குத்திக்கொண்டே இருப்பார். லேட்டஸ்டாக, திமுக.வில் பதவிக்காக பலரும் இருப்பதாக சாடியிருக்கிறார் அவர்!

மு.க.அழகிரியின் நம்பர் ஒன் ஆதரவாளர் பி.எம்.மன்னன். மதுரை முன்னாள் துணை மேயரான மன்னனின் மகள் பிரீத்தி – சுவாதித்தன் திருமணம் இன்று விரகனூர் ரிங்ரோடு வேலம்மாள் மருத்துவக்கல்லூரி கல்யாண மகாலில் நடந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரி ஆகியோருடன் வந்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: ‘மன்னன் கலைஞரின் ஆசியுடன் துணை மேயராக பொறுப்புக்கு வந்தார். இந்த திருமணத்திற்கு வரும்போது நல்லவேளையாக என் வேட்டியை உருவிவிடாமல் இருந்தார்கள். அந்த அளவுக்கு மாநாடுபோல கூட்டம் உள்ளது.

மன்னன் என்னிடம் எந்த எண்ணத்திலும் இல்லை. அவருக்கு பதவி ஆசை கிடையாது. இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் கடுமையாக உழைத்து கலைஞரின் கையில் வெற்றிக் கனியை பறித்து தந்தவர், மன்னன்.

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் ஆகட்டும், திருமங்கலம், திருச்செந்தூர் இடைத்தேர்தல் ஆகட்டும் மன்னனின் உழைப்பு மகத்தானது. மன்னனும், அவரது நண்பர்களும் என்னிடம் பதவிக்காக இல்லை. ஆனால் அங்கே (தி.மு.க.) இருப்பவர்கள் அப்படி அல்ல.

அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. அப்போது அங்கே எத்தனைபேர் இருப்பார்கள்? எத்தனை பேர் போவார்கள்? என்பது தெரியவரும். நான் அடுத்த வருடம் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் தோழர்களின் வற்புறுத்தலால் இங்கு பேசவேண்டியதாகி விட்டது.

நடிகை மனோரமா சினிமாவில் கின்னஸ் சாதனை படைத்தார். பின்னணி பாடகி சுசிலா 17 ஆயிரத்து 500 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்தார். இதேபோல மன்னனுக்கும் தொலைபேசியில் பேசுவதற்காக கின்னஸ் சாதனை தரலாம்.

அவர் என்னிடம் பேசும் போதும், என்னுடன் பயணம் செய்யும்போதும் அவருக்கு நிறைய போன் கால்கள் வரும். இதில் இருந்தே அவருக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை தெரிந்து கொண்டேன்.

மன்னனின் இல்ல திருமண விழாவுக்கு வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் நண்பர்கள் வந்து இருக்கிறார்கள். இதன் மூலம் அவரது நண்பர்கள் வட்டம் எவ்வளவு பெரியது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

மன்னன் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதில் எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த பெருமை ஆகும். மணமக்களுக்கு கலைஞரின் நல்வாழ்த்தையும் தெரிவித்து மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.’ இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close