மு.க.அழகிரி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது குறித்து ஆதரவாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மு.க.அழகிரி, செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்தி தனது பலத்தைக் காட்டினார். அதோடு அவர் ஓய்ந்துவிடவில்லை. மதுரையில் கருணாநிதி முழு உருவச் சிலை திறப்புக்கு அனுமதி கோரி மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்திருக்கிறார்.
மதுரையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவையும் தனது பிறந்த நாளையும் வருகிற ஜனவரி மாதம் மாநாடு போல நடத்திக் காட்டத் தயாராகி வருகிறார் அழகிரி! இதற்கிடையே தனது ஆதரவாளர்களையும் சந்தித்து ஜரூராக ஆலோசனை நடத்தி வருகிறார் அழகிரி!
சென்னை பேரணியை முடித்துக்கொண்டு கிளம்பிய தனது ஆதரவாளர்கள் பலருக்கு அடுத்த சில நாட்களில் அழகிரியே போன் செய்து குறிப்பிட்ட தினத்தில் மதுரைக்கு வரும்படி அழைத்தார். வேறு பலரை தனது ‘தளபதி’யான முன்னாள் துணை மேயர் மன்னன் மூலமாக அழைத்தார்.
மு.க.அழகிரி தினமும் 3 அல்லது 4 மாவட்டங்களில் இருந்து தனது ஆதரவாளர்களை மதுரைக்கு வரவழைத்து, மதுரையில் உள்ள தயா திருமண மகாலில் ஆலோசித்து வருகிறார். ஆனால் இப்படியொரு ஆலோசனை நடப்பதை மீடியாவுக்கே தெரியாமல் கடந்த சில நாட்களாக மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ரகசியம் காக்கிறார்கள்.
மு.க.அழகிரியை எதேச்சையாக சந்தித்தால்கூட போட்டோ எடுத்து முகநூலில் பதிவு செய்கிற நிர்வாகிகளுக்கும்கூட, இந்த ஆலோசனைக் கூட்டப் படங்களையோ செய்திகளையோ கசிய விடக்கூடாது என உத்தரவு! ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் மண்டபத்தில் தேவையில்லாமல் மீடியா ஆட்கள் வந்து நின்றுகொண்டு, வந்து போகிறவர்களை கணக்கெடுப்பார்கள் என்பதாலேயே இந்தக் கட்டுப்பாடு!
இரு தினங்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தினார். அப்போது ஒருவர், ‘தலைவர் தொகுதியான திருவாரூரில் அண்ணன் (அழகிரி) போட்டியிட வேண்டும். நாங்கள் அங்கு வந்து வேலை செய்யத் தயார்’ என்றார்.
அதற்கு அழகிரி, ‘தேர்தல் பண விளையாட்டாகிப் போச்சு. பொறு, பார்க்கலாம்’ என கூறியிருக்கிறார். இன்னொரு நிர்வாகி, ‘உடனே தனிக் கட்சி ஆரம்பிங்கண்ணே!’ என கூற, ‘கட்சி ஆரம்பிக்கிறதில் நிறைய நடைமுறை இருக்குப்பா’ என்றாராம் அழகிரி.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்களை செப்டம்பர் 13-ம் தேதி அழகிரி சந்தித்தார். இவர்களிலும் சிலர் ‘தனிக்கட்சி’ வேண்டும் என்றும், வேறு சிலர் ‘தனி இயக்கம்’ தேவை என்கிற கருத்தையும் வலியுறுத்தினர்.
தனி இயக்கம் தொடங்கும் கருத்தில் அழகிரிக்கு உடன்பாடு இருப்பதாக தெரிகிறது. ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கு வருகிற டிசம்பருக்குள் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அவற்றுடன் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களும் நடைபெறும் என எதிர்பார்க்கிறார் அழகிரி!
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தனக்கான களமாக பயன்படுத்திக் கொள்ள அழகிரி தயாராகிறார். அங்கு தனது ஆதரவாளரை நிறுத்தியோ அல்லது வேறு வகையிலோ திமுக.வுக்கு குடைச்சல் கொடுப்பது அவரது திட்டம்!
ஆர்.கே.நகரைப் போலவே திருப்பரங்குன்றத்திலும் திமுக 3-வது இடத்தையே பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக அழகிரிக்கு நெருக்கமான வட்டாரத்தினர் கணிக்கின்றனர். அந்தச் சூழலில் அழகிரியின் தேவை குறித்து திமுக.வில் விவாதம் எழும்! அதை பயன்படுத்தி கட்சிக்குள் நுழைய அழகிரி தரப்பினர் விரும்புவதாக தெரிகிறது.
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அதிமுக, பாஜக அணி, அமமுக ஆகிய கட்சிகளுடன் அழகிரியை எதிர்கொள்வதும் திமுக.வுக்கு ஒரு சவாலாக இருக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.