MK Alagiri Tamil News: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஜனவரி 30-ம் தேதி என்றாலே மதுரை களை கட்டும். மு.க.அழகிரியின் பிறந்த நாள் என்பதுதான் அதற்கு காரணம். திமுக ஆட்சியில் அமைச்சர் பிரதானிகள் எல்லாம் அங்கு அணிவகுத்த காட்சிகளை மறந்துவிட முடியாது.
திமுக ஆட்சி முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக.வில் இருந்து அழகிரி நீக்கப்பட்டு, 6 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இடைப்பட்ட காலத்தில் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் வெகுவாக சுருக்கிக் கொண்டார் அழகிரி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மதுரை களை கட்டுகிறது. அதுவும் ஜனவரி 3-ம் தேதி, 30-ம் தேதி என இருநாள் திருவிழாவாக!
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கே அழகிரி தனது ஆட்டத்தை ஆரம்பிப்பார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போது நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ‘நான் இப்போ அரசியலில் இல்லை’ என ஒருவரிப் பதிலோடு நழுவிச் சென்றார் அழகிரி.
அதற்கெல்லாம் மாறாக கடந்த 24-ம் தேதி சென்னை கோபாலபுரத்தில் முற்றிலும் வித்தியாசமான அழகிரியைப் பார்க்க முடிந்தது. தனது தாயார் தயாளு அம்மாளை நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்து திரும்பிய அழகிரி, நிருபர்கள் கேட்ட அத்தனைக் கேள்விகளுக்கும் நின்று, நிதானித்து பதில் தந்தார்.
‘3-ம் தேதி எனது ஆதரவாளர்கள் கூட்டத்தை மதுரையில் வைத்திருக்கிறேன். அடுத்த கட்ட அரசியல் பற்றி அங்கு ஆலோசனை செய்வோம்’ என்றார் அழகிரி. ‘தனிக்கட்சி தொடங்குவீர்களா?’ எனக் கேட்டபோது, ‘அதுதான்... ஆதரவாளர்களுடன் பேசி, அவர்கள் கூறுகிறபடி செய்வேன்’ என்றார். ‘திமுக.வுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா?’ என்கிற கேள்விக்கு, ‘இல்லை’ என்கிற பதிலை திட்டவட்டமாக தெரிவித்தார் அழகிரி. எனவே குடும்பச் சமாதானப் படலங்கள் தோல்வியில் முடிந்துவிட்டதாகவே அழகிரியின் பேட்டி உணர்த்தியது.
இதையெல்லாம்விட முக்கியமான ஒரு கேள்வி, ‘ரஜினியை சந்திப்பீர்களா?’. அதற்கு, ‘ரஜினி இப்போது சென்னையில் இல்லையே! அவர் சென்னை வந்ததும் சந்திப்பேன்’ எனக் கூறி தனது அடுத்தகட்ட நகர்வை லேசாக கோடிட்டுக் காட்டினார் அழகிரி.
இது குறித்து அழகிரி ஆதரவாளர்கள் கூறுகையில், ‘பொதுவாக அண்ணன் (அழகிரி) அதிகம் பேசமாட்டார். ஆனால் ஒரு வார்த்தையைக்கூட யோசிக்காமல் செய்தியாளர்களிடம் பேசமாட்டார். ரஜினியை சந்திப்பேன் என அவர் கூறியிருக்கிறார் என்றால், ரஜினியுடன் ஒன்றிரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை அவர் முடித்துவிட்டார் என்றே அர்த்தம். எனவே அண்ணன் கூட்டணியை ‘செட்’ பண்ணிவிட்டார். 3-ம் தேதியும், 30-ம் தேதியும் மதுரை திணறும்’ என்றார்கள் அவர்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், மு.க.அழகிரி, டிடிவி தினகரன், டாக்டர் கிருஷ்ணசாமி என ஒரு கூட்டணியை கட்டவும், முடிந்தால் இந்த அணிக்கு நடிகர் விஜய்யின் ஆதரவைப் பெறவும் காய்கள் நகர்த்தப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருக்கிறது. தீவிரமான திமுக எதிர்ப்பாளர்கள் சிலர் சென்னையில் இதற்கான பணிகளை முன்னெடுத்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
எல்லாம் சரி... அழகிரியின் பலம்தான் என்ன? அவரை நம்பி பின்னால் அணிதிரள இன்னும் கட்சிக்காரர்கள் இருக்கிறார்களா? என்கிற முக்கியமான கேள்வி இருக்கிறது. அரசியலைப் பொறுத்தவரை, ஒருவரின் பலவீனம்தான் இன்னொருவரின் பலம்! திமுக.வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல மாவட்டங்கள் ஒரே நிர்வாகிகளின் ஆளுகையில் இருக்கின்றன. அந்த நிர்வாகிகளை பகைத்துக் கொண்ட முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள், முன்னாள் பேரூர் செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் பலர் இன்று நடுத்தர வயதில் அரசியல் வாய்ப்புகளுக்காக அல்லாடுகிறார்கள். அழகிரியின் முதல் குறி இவர்கள்தான்.
அதேபோல, திமுக.வில் தாக்குப்பிடிக்க முடியாமல் அதிமுக.வுக்கு சென்று, அங்கும் வாய்ப்புகள் இல்லாத முன்னாள் நிர்வாகிகள் பலர் மாவட்டம்தோறும் இருக்கின்றனர். இவர்களை இழுப்பது அழகிரியின் இரண்டாவது திட்டம். இவர்களில் பலர் களப்பணியை அறிந்தவர்கள். உள்ளூர் திமுக.வினரின் பலம், பலவீனங்களை தெரிந்தவர்கள்.
அழகிரியை நம்பி இவர்கள் வருவார்களா? என்கிற கேள்வியும் இருக்கிறது. அந்த நம்பிக்கையை ஊட்டுவதற்குத்தான் கூட்டணி திட்டத்தை கையில் எடுக்கிறார் அழகிரி. இப்போது கட்சி ஆரம்பித்து, அடுத்த சில மாதங்களில் தன்னால் மட்டும் பெரிய புரட்சியை உருவாக்கிவிட முடியாது என்பது அழகிரிக்கும் தெரியும். அதேசமயம் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோருடன் இணைந்து, தேர்தல் வேலைகளில் அனுபவம் மிக்க அழகிரி, டிடிவி தினகரன், தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்திருக்கும் கிருஷ்ணசாமி ஆகியோர் களம் இறங்கும்போது இந்த அணி வலுவானதாகவே இருக்கும். நிச்சயம் திமுக, அதிமுக அணிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான திறமையான நிர்வாகிகள் இந்த அணி நோக்கி வருவார்கள் என நம்பிக்கை வெளிப்பட பேசுகிறது அரசியல் வட்டாரம்!
அழகிரி ஆதரவாளர்களில் பெரும்பாலானோர், அழகிரி தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிற மனநிலையிலேயே இருக்கிறார்கள். எனவே 3-ம் தேதி ஆலோசனை, தனது பிறந்த நாளான ஜனவரி 30-ம் தேதிக்குள் தனிக்கட்சி அறிவிப்பு என்கிற திட்டத்திற்கு அழகிரி வந்துவிட்டதாகத் தெரிகிறது. புதிய கட்சியின் நிறுவனத் தலைவராக தனது 70-வது பிறந்த நாளை அழகிரி கொண்டாடுவார் என எதிர்பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.