முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தனது ஆதாரவாளர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து நேரடியாக வீட்டுக்கே தேடிச்சென்று நலம் விசாரித்து உதவி செய்துள்ள்ளார். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மு.க. அழகிரி லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி, கலைஞர் உயிருடன் இருந்தபோதே திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, தனது இளைய சகோதரர் மு.க. ஸ்டாலின் உடன் அவ்வப்போது உரசல்கள் இருந்தாலும் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படவில்லை.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, கருணாநிதி குடும்பத்தில் ஒரு சுமூக நிலை ஏற்பட்டது. ஆனால், இதுவரை மு.க. ஸ்டாலினும் அவரது மூத்த சகோதாரர் மு.க. அழகிரியும் சந்தித்துக்கொள்ளவில்லை. அதற்கு பிறகு, மு.க. அழகிரி குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் வெளியே எந்த பொது நிகழ்ச்சிகளிம் பெரியதாக குறிப்பிடும் படியாக கலந்துகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான், மு.க. அழகிரி, மதுரை கொடிக்குளத்தில் உள்ள தனது ஆதரவாளர் இசக்கிமுத்துவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை அறிந்து நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். மேலும், இசக்கி முத்துவின் மருத்துவ செலவுக்கு மு.க. அழகிரி பண உதவி செய்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளரும் மதுரை திமுக முன்னாள் அவைத்தலைவருமான இசக்கிமுத்துவின் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி முத்து, “திமுக வெற்றி பெற வேண்டும் என்றால் அழகிரியின் தேவை முக்கியமானது. மு.க.அழகிரி பதவி ஆசை பிடித்தவர் இல்லை; திமுக தலைமையுடன் தற்போது வரை பேச்சுவார்த்தை இல்லை, அவர்களே உணர்ந்து எங்களை அழைத்துக் கொள்வார்கள்.” என்று கூறினார்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, அமைதியாக இருந்து வந்த மு.க. அழகிரி நீண்ட இடைவெளிக்கு பிறகு, தனது ஆதரவாளரைத் தேடிச் சென்று நலம் விசாரித்து உதவி செய்த நிகழ்வின் மூலம் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"