தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 133 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. நாளை காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ராகுல்காந்தி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, ரமேஷ் பொக்ரியால் என பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் அண்ணனும், திமுக வில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் உறுப்பினருமான மு.க.அழகிரி, முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சித் தருவார். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள எனது தம்பியான ஸ்டாலினை பார்க்க பெருமையாக இருக்கிறது எனவும், மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி மறைவுக்கு பின், திமுக வில் அதிகாரத்தை பெறுவதில் ஸ்டாலினுகும் அழகிரிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், திமுக வில் இருந்து முழுவதுமாக அழகிரி ஒதுக்கப்பட்டார். சுமார் 3 ஆண்டு காலமாக அமைதியாக இருந்த அழகிரி, சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய சமயத்தில், ஸ்டாலினுக்கு எதிராக போர்க்குரல் உயர்த்தினார். ஸ்டாலினுக்கு எதிராக ‘கலைஞர் திமுக’ என்ற கட்சியை அழகிரி தொடங்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்த நிலையில், ஸ்டாலினை வெற்றி பெற விட மாட்டேன் என அழகிரி சூளுரைத்து வந்த நிலையில், ஸ்டாலின் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளார். இதனிடையே, முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு அழகிரி வாழ்த்து தெரிவித்திருப்பதும், ஸ்டாலின் எனது தம்பி என அழுத்தமாக தெரிவித்திருப்பதும் திமுக வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil