தமிழக அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று மு.க. அழகிரி பேசியிருப்பது திமுகவினரிடையே மட்டுமல்லாது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடம் காலியாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ரஜினியின் கருத்துக்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசியல் வெற்றிடம் முதல்வர் பழனிசாமியால் நிரப்பப்பட்டு விட்டதாக கருத்து தெரிவித்திருந்தனர்.
ரஜினி இந்த கருத்தை தெரிவித்து பல நாட்கள் கடந்துவிட்டபோதிலும், எல்லா பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்த கேள்வி முதன்மை இடத்தை பிடித்து விடுகிறது.
திமுக முன்னாள் தென்மண்டல அமைப்பு செயலாளராக பதவி வகித்து தென் மாவட்டங்களில் கோலோச்சி, தற்போது அக்கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்தமகன் மு.க.அழகிரி, சென்னை விமானநிலையம் வந்திருந்தார்.
அவருடனான பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்த கேள்வி முதன்மை இடம்பிடித்தது. அப்போது அவர் கூறுகையில், ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மை தான். ரஜினி வருவார், அந்த வெற்றிடத்தை நிரப்புவார் எனக்கூறினார்.
அழகிரியின் இந்த கருத்து திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது இருப்பை காட்டிக்கொள்வதற்காகவே, அழகிரி இவ்வாறு பேசிவருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.