மு.க.அழகிரி சென்னை பயணம் : தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி செப்.5ம் தேதி பேரணி நடத்தப்போவதாக மு.க.அழகிரி அறிவித்திருந்தார்.
இதற்காக பல்வேறு மாவட்ட ஆதரவாளர்களுடன் தினந்தோறும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 30-ம் தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ”கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கட்சியில் மீண்டும் இணைய தனக்கோ தன் மகன் தயாநிதி அழகிரிக்கோ கட்சியில் எந்தப் பதவியும் தரத் தேவையில்லை. உண்மையான கட்சித் தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். அமைதிப் பேரணிக்குப் பிறகு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றும் அழகிரி கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, நேற்று அழகிரி தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு அவரிடம் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அழகிரி, ‘நான் தலைவர் கருணாநிதியின் மகன். சொன்னதைச் செய்வேன்’ என்றார்.
இந்த நிலையில், நாளை மறுதினம் நடக்கவுள்ள அமைதிப் பேரணியின் ஏற்பாடுகளை கவனிக்க, மு.க.அழகிரி மதுரையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அப்போது, 'பேரணியின் எழுச்சி எப்படி இருக்கும்?' என்று நிருபர்கள் கேட்டனர். இதற்கு, '5-ம்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ம் தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும். நான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க மாட்டேன்.' என்று பதில் அளித்தார்.