அஞ்சாநெஞ்சன்... உண்மை உடன்பிறப்புகளுடன் ஆலோசனை" என்ற பெயரில் மதுரையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்.
பாண்டிகோவில் அருகே துவாரகா பேலசில் மாலை 4 மணியளவில் கூட்டம் தொடங்கியது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கட்சி தொடங்கி அரசியலில் போட்டியிடுவதா? அல்லது திமுக.வுடன் இணைந்து செயல்படுவதா? போன்ற முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படுகிறது.
மேலும், தனிக்கட்சி தொடங்கும் பட்சத்தில் கமல்ஹாசன், விஜயகாந்த், டிடிவி தினகரன், டாக்டர் கிருஷ்ணசாமி என ஒரு கூட்டணியை உருவாக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீவிரமான திமுக எதிர்ப்பாளர்கள் சிலர் சென்னையில் இதற்கான பணிகளை முன்னெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுகவின் முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள், முன்னாள் பேரூர் செயலாளர்கள், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் போன்றவர்களை அழகிரி தன்பக்கம் இழுக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக, மதுரையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி " கருணாநிதி அவர்களுடைய ஆட்சியில் ஒரு குடும்பம் தான் வாழ்ந்தது. அவர் குடும்பத்தில் இருப்பவர்கள்தான் அதிகாரத்திற்கு வரமுடியும், பதவிக்கு வரமுடியும். இங்கு மேடையில் வீற்றிருக்கின்ற சாதாரண மக்கள், இங்கு என் முன் நின்று கொண்டிருக்கிறீர்களே உங்களைப் போன்றிருக்கின்ற சாதாரண மக்கள் எவரும் திமுகவில் எந்தப் பதவிக்கும் எந்தக் காலத்திலும் பதவிக்கு வரமுடியாது. அங்கு வாரிசு அரசியல் மட்டுமே " என்று தெரிவித்தார்.
முன்னதாக திருச்சி மாவட்டத்திl தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர், " .க. அழகிரி அரசியலுக்கு வரக் கூடாது என மு.க. ஸ்டாலின் எண்ணுகிறார். சொந்த அண்ணனுக்கே எதிராக செயல்படக் கூடியவர், நாட்டு மக்களுக்கு எவ்வாறு நல்லது செய்வார்?" என கேள்வி எழுப்பினார் .