மு.க.அழகிரி அளித்த பேட்டியில், ‘திமுக.வை வலுப்படுத்த ஸ்டாலின் ‘ஜிம்’முக்கு செல்வதாகவும், ‘சிக்ஸ்பேக்’கிற்கு ஸ்டாலின் மாறி வருவதாகவும்’ கிண்டலாக கூறினார்.
MK Stalin's Workout Video at a Gym 2017 | Thalapathy Stalin Never Ever Give up Challenge: https://t.co/9cM8zh5ynH via @YouTube
— Mahe RJ (@RJMahe) November 3, 2017
மு.க.அழகிரி திடீரென திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக அதிரடி கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார். வாரமிருமுறை இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ஸ்டாலின் செயல் தலைவராக தொடரும்வரை திமுக வெற்றி பெற முடியாது’ என்றார்.
மு.க.அழகிரி அதன் தொடர்ச்சியாக இன்று (டிசம்பர் 27)டி.வி. சேனல்களுக்கு அளித்த பேட்டி வருமாறு : ‘ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்க முடியாது என்பதை கண்கூடாக பார்த்து வருகிறீர்கள் (ஆர்.கே.நகரில்). நாலு மாசத்திற்கு முன் கடுமையாக பேசியவர்களை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் எப்படி வெற்றி பெற முடியும்?
வைகோ நான்கு மாசத்திற்கு முன்பு சாதிக் பாட்சா கொலையில் திமுக.வுக்கு பங்கு இருக்கிறது என்றார். 2ஜி ஊழலில் திமுக.வுக்கு பங்கு இருப்பதாக மாநாடு போட்டார். நான்கு வருஷமா பார்த்துக்கிட்டிருக்கேன். அதிமுக.வில் இருந்தும் மதிமுக.வில் இருந்தும் வந்தவர்களுக்கு திமுக.வில் பதவி கொடுக்கிறாங்க. இப்போக்கூட மதிமுக.வில் இருந்து வந்த மணிமாறன் என்பவருக்கு தேர்தல் பணிச் செயலாளர் பதவி கொடுத்திருக்காங்க. பிறகு எப்படி ஜெயிக்க முடியும்?
ஸ்டாலின் கட்சியை வலுப்படுத்துவாரா? என கேட்கிறீர்கள். அதற்குத்தான் அவர், ‘ஜிம்’முக்கு போகிறார். வெயிட் லிஃப்ட் தூக்குறார். பாடியை ‘சிக்ஸ் பேக்’கிற்கு மாற்றுகிறார்.’ என கிண்டலாக பதில் தெரிவித்தார் அழகிரி.
தொடர்ந்து அழகிரி கூறுகையில், ‘கட்சி மேல அக்கறை இருப்பதால்தான் இதை நான் கூறுகிறேன். கருணாநிதியை முதல்வர் வேட்பாளர் என கூறியதால்தான் கடந்த தேர்தலில் 89 சீட்களை ஜெயித்தோம். ஸ்டாலினை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் வெற்றி கிடைக்கும்’ என்றார் அழகிரி.