மு. க அழகிரி அதிரடி: கருணாநிதியின் நினைவிடத்தில் மு. க அழகிரி அளித்த பேட்டி திமுகவில் அடுத்தக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக செயற்குழுவுக்கு முன் தினம் இந்தப் பேட்டியை அவர் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மு. க அழகிரி அதிரடி பேட்டி :
திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு அவரது கட்சிக்கும், அவரது தொண்டர்களுக்கு ஈடுச் செய்ய முடியாத ஒரு மாபெரும் இழப்பு என்பது அனைவருக்கும் தெரிந்தே. கருணாநிதிக்கு பிறகு திமுகவில் அடுத்த கவனத்துக்குரிய நபராக இருப்பவர் கருணாநிதியின் மூன்றாவது மகன் மு.க ஸ்டாலின்.
தற்போது கட்சியின் செயல் தலைவராகவும் முக ஸ்டாலின் உள்ளார். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தலைவர் பதவி காலியானால் அவரின் இடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும் கட்சி, தலைவர் இல்லாமல் இயங்கக் கூடாது. அதே போல் கட்சியின் செயல்பாடுகளும் நின்று விடக் கூடாது.
இதைக் கருத்தில் கொண்டு நாளை திமுக அவசர செயற்கூட்டம் நடைபெறுகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே போல் கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட இந்த செயற்குழுவில் அதிகாரபூர்வமற்ற முறையில் முடிவு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கருணாநிதியின் இரண்டாவது மகனான மு.க அழகிரி மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு இன்று (13.8.18) காலை வருகை தந்தார். தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வந்திருந்த அவர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர் புயலை கிளப்பும் வகையில் பல்வேறு பதில்களை கூறியுள்ளார். மு.க அழகிரி பேசியதாவது “ என்னுடைய ஆதங்கத்தை எனது தந்தையும் தலைவருமான கருணாநிதியிடம் வேண்டிக்கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது.
தமிழகத்தில் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லோரும் என் பக்கம் தான் உள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விசுவாசிகளும் என் பக்கம் தான் உள்ளார்கள், என்னை ஆதரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு காலம் பின்னாளில் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். நான் இப்போது திமுகவில் இல்லை. எனவே, திமுகவின் செயற்குழு கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று கூறினார்.
மு. க அழகிரி கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றி, மதுரையில் பெரும் சமாராஜ்ஜியத்தையே நடத்தி வந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
கருணாநிதியின் இறப்புக்கு பிறகு குடும்பம் கட்டுகோப்பாக, ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான திமுக தொண்டர்களின் ஆசையாக உள்ளது. இந்நிலையில் மு.க அழகிரி தனியாக மெரினாவில் இப்படி ஒரு பேட்டியை அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், நாளை நடைப்பெறும் திமுக செயற்குழு கூட்டத்தில் மு.க அழகிரிக்கு கட்சியில் பதிவி தர, ஸ்டாலின் சம்மதம் தெரிவிப்பாரா? என்கிற விவாதங்களும் நடக்கின்றன. ஆனால் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளிடம் பேசுகையில், ‘அழகிரி அத்தியாயம், திமுக.வில் முடிந்துபோன ஒன்று’ என்கிறார்கள்.
இதற்கிடையே ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக்காட்சிக்கு அழகிரி அளித்த பேட்டியில்,‘நான் திமுகவுக்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. நான் திமுகவுக்கு வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன. என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.