நாட்டையே அதிர வைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து, நாடெங்கிலும் உள்ள திமுக தொண்டர்கள் இத்தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
2ஜி வழக்கு தீர்ப்பு: இனிப்புகள் வழங்கும் ஸ்டாலின்
பின்னர் பேட்டியளித்த ஸ்டாலின், "2ஜி வழக்கில் யாரும் குற்றம் செய்யவில்லை என்று டெல்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2ஜி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இந்த நேரத்தில் நான் மீடியா நண்பர்களிடம் வேண்டி விரும்பி ஒன்றை மட்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
2ஜி வழக்கில் திமுக மீது குற்றம் சாட்டப்பட்ட போது, கழகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது மீடியா. இப்போது இந்த வழக்கில் யாரும் குற்றமே செய்யவில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இப்போது, இந்த தீர்ப்பு குறித்து மீடியா மக்களிடம் கொண்டு போய் அதிகளவு சேர்க்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.