காவிரி பிரச்சனை: மெஜாரிட்டியை சுட்டிக்காட்டி மத்திய அரசை எச்சரிக்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின்

தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைக்க ஒரு கூட்டுச்சதித் திட்டம்

By: June 30, 2018, 7:58:04 PM

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதி நீர் பிரச்சினையில் இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் திரு குமாரசாமி தலைமையிலான அரசு, ஏற்கனவே திரு சித்தராமையா தலைமையில் இருந்த அரசு கடைப்பிடித்து வந்த வழக்கத்தின் தொடர்ச்சியாக, அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் காவிரிப் பிரச்சினையைச் சிக்கலாக்கிடவும், பிரச்சினையின் ஆயுளை நீட்டிக்கவும் வஞ்சக எண்ணத்தோடு திட்டமிட்டிருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கர்நாடக முதலமைச்சர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும், பிரதமர் நரேந்திரமோடி அவர்களையும் சந்தித்து விட்டுத் திரும்பியவுடன், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இப்படியொரு பின்னடைவான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பதில், தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைக்க ஒரு கூட்டுச்சதித் திட்டம் உருவாகியிருக்கிறதோ என்றே கருதிட வேண்டியிருக்கிறது.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகின்ற ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், “உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையிடுவோம்” என்றும் “ஸ்கீம் பற்றி விளக்கம் கேட்போம்” என்றும், “இந்த ஸ்கீமை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” என்றும் மீண்டும் பழைய பல்லவியையே பாடி குறுக்குச்சால் ஓட்டுவதும், காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும், காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவுகளையும் வேண்டுமென்றே பிடிவாதமாக அலட்சியப்படுத்துவதுமான கர்நாடக மாநில முதலமைச்சர் திரு குமாரசாமியின் பிழையான வழிமுறையை, நடுநிலையாளர் யாரும் – அவர்கள் கர்நாடகத்தைச் சார்ந்தோராயினும் தமிழகத்தைச் சார்ந்தோராயினும் – நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அண்டை மாநில உறவுகளுக்குப் பேராபத்தை உருவாக்கும் இந்தப் போக்கு, தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து அவர்களின் வாழ்வாதாரத்தை முறித்துப்போட்டுவிட, மத்திய பா.ஜ.க. மற்றும் கர்நாடக மாநில அரசின் திட்டமிட்ட முயற்சியோ என்று அனைவரையும் அய்யம்கொள்ள வைக்கிறது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும், மத்திய அரசிதழில் வெளியிட்ட இறுதி வரைவுத் திட்ட அறிவிக்கையிலும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதிலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் உறுதித் தன்மை உருக்குலைய முயற்சி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அமைக்கப்பட்டுள்ள காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தையும் செயலிழக்க வைக்கும் கர்நாடக மாநில அரசின் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு எவ்விதத்திலும் துணைபோய்விடக்கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

கர்நாடக மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கின்ற சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக மாநில அரசின் இந்தப் புதிய நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி அவசர அவசியமாக விவாதிக்க வேண்டும் எனவும், காவிரிப் பிரச்சினையில் இப்போது கிடைத்துள்ள இந்தக் குறைந்தபட்ச உரிமையையாவது நிலை நாட்ட அனைத்துக் கட்சிகளின் துணையுடன் போராடுவதுடன், கர்நாடக மாநிலத்தை விட தமிழகத்தில் அதிக எம்.பி.க்கள் இருப்பதை மத்திய பா.ஜ.க. அரசுக்கு சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் உடனடியாகப் பிரதமர் அவர்களைச் சந்தித்து, காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அச்சுப்பிசகாமல் அணுவளவும் வழுவின்றி அப்படியே நிறைவேற்றுவதற்கு உரிய தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mk stalin about cauvery issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X