கொடநாடு விவகாரம்: 'நாளை கவர்னரை சந்திக்கிறேன்; அடுத்து கோர்ட் தான்' - மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும்

கவர்னரை நாளை நேரடியாக சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக முறையிட உள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது நான் கிராமம் கிராமமாக சென்றேனா? இப்போது சென்று குறை கேட்பதா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்.

அதற்கு நான் சில விளக்கத்தை சொல்கிறேன். 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். பல ஆண்டுகாலமாக பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஊராட்சிகளுக்கு தேர்தலை நடத்தியதும் நாங்கள்தான். நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது நிதி பகிர்வு குறித்து எனது தலைமையில் குழு அமைக்கப்பட்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது 99 பரிந்துரைகளை நிறைவேற்றி செயல்படுத்தினோம்.

கிராம ஊராட்சிகளுக்கு அதிக நிதியை உருவாக்கி கொடுத்தோம். நாங்கள் சமத்துவபுரத்தை உருவாக்கினோம். நமக்குநாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தினோம். காங்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுத்தோம். 12,617 ஊராட்சிகளிலும் நூலகத்தை உருவாக்கினோம். 29 ஆயிரம் ஊரக சாலைகளை, 54 ஆயிரம் சாலைகளாக அதிகரித்தோம். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.6,364 கோடி கடன் வழங்கினோம். நானே நேரடியாக சென்று மகளிருக்கு உதவி வழங்கினேன்.

ராமநாதபுரத்தில் கூட்டுக் குடிநீர் திட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூரில் கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். இப்படி பல திட்டங்களை எங்கள் ஆட்சியில் செய்ததை சொல்ல முடியும்.

ஆனால் இன்று கொலை, கொள்ளை, வழிப்பறி, லஞ்சம் என்று சொல்ல வேண்டுமென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைத்தான் சொல்லமுடியும்.

உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது தி.மு.க. தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் திட்டமிட்டு ஒரு பொய்யை சொல்லி வருகிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்காக வழக்கு போட்டது நாங்கள் தான். அதை நிறுத்த வழக்கு போடவில்லை.

ஆனால் தேர்தலை முறையாக நடத்த, அதில் உள்ள குறைகளை நீக்க ஆர்.எஸ்.பாரதி மூலம் வழக்குபோட்டோம். மலை வாழ் மக்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்கி முறைப்படி நடத்த வழக்கு போட்டோம். 2017-ம் ஆண்டு மே மாதம் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இந்த அரசு தேர்தலை நடத்தவில்லை. பலமுறை கோர்ட்டு சொல்லியும் இதுவரை உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இது யார் தவறு? என் தவறா? எடப்பாடி பழனிசாமி மீது தவறா? மக்களுக்கு உண்மை தெரியும்.

இப்போது நான் முதலமைச்சராக இல்லை. தேர்தல் ஆணையம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தலை நடத்த வேண்டியது அவர்கள் பொறுப்பு. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு இணையானது கொடநாடு பங்களா. ஜெயலலிதா இருந்த போதும், அவர் இறந்த பிறகும் கொடநாட்டில் மர்ம மரணம், திருட்டு, கொள்ளை, கொலை, விபத்து தொடர்ந்து நடக்கிறது. கொடநாடு காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். கார் டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்.

சயன் என்பவரின் மனைவி, மகள், சாலை விபத்தில் மரணம் அடைந்தனர். இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு குறும்படம் வெளியிட்டுள்ளார். அதில் சயன், வாளையார் பேட்டி கொடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் காரியங்களை செய்ததாக அதில் கூறுகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டு எதற்கும் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. அதற்கு பதில் போலீசில் புகார் செய்துள்ளதாக கூறுகிறார். கனகராஜை தெரியாது என்று அவர் சொல்லவில்லை. சயன் என்பவர் யார் என்றே தெரியாது என்றும் அவர் சொல்லவில்லை. ரூ.2000 கோடி பணம் குறித்தும் எதுவும் சொல்லவில்லை. ரூ.5 கோடி பேரம் நடந்தது குறித்தும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் பொத்தாம் பொதுவாக அரசியல் சதி என்று கூறுகிறார். இவர்கள் சொன்ன புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அதற்கு மாறாக குற்றச்சாட்டு சொன்னவர்கள் மீது வழக்குபோட்டு மிரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார். இந்த வி‌ஷயத்தில் தி.மு.க.வின் கோரிக்கை என்னவென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே பதவி விலக வேண்டும்.

மத்திய அரசு சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம், ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

கவர்னரை நாளை நான் நேரடியாக சந்தித்து இதுபற்றி முறையிடுவேன். இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. நீதிமன்றத்தை நாடும்” என்று அவர் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close