தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சண்டிகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஊடுகதிர் துறையில் படித்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மாணவர் ஆர்.கிருஷ்ணபிரசாத் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கிருஷ்ணபிரசாத் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 24 வயதே ஆன தன் மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவ மேற்படிப்பிற்கான போட்டித்தேர்வில் வெற்றிபெற்று, பிற மாநிலங்களில் மருத்துவ மேற்படிப்பில் இணையும் தமிழக மாணவர்கள் ரேகிங், இன - மொழி பாகுபாடு, எதிர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்வதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வந்தாலும், மத்தியில் உள்ள பாஜக அரசோ அல்லது மாநிலத்தில் உள்ள அதிமுக அரசோ, தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒரு நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனையளிக்கிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த இரு தமிழக மாணவர்கள் மரணத்தையொட்டி, வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநிலத்தில் தனியாக ஒரு கண்காணிப்புக் குழுவைத் துவக்க வேண்டும் என்று அறிக்கை வாயிலாகவும், தமிழக சட்டமன்றத்திலும் பிரதான எதிர்கட்சித் தலைவர் என்றமுறையில் எடுத்து வைத்தும், அதை அதிமுக ஆட்சி காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியம் செய்துவருவது மிகவும் கவலையளிக்கிறது. இதுபோல, உயர்கல்வி பெற வேறு மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக மாணவர்களை இழப்பதற்கு தமிழகம் இனியும் தயாராக இல்லை என்பதை மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும். ஆகவே, தமிழக மாணவர் கிருஷ்ணபிரசாத்திற்கு கொடுக்கப்பட்ட மன - உடல்ரீதியான தொல்லைகள் குறித்து உரியமுறையில் விசாரணை மேற்கொண்டு, அந்த மாணவனின் மரணத்தில் எழும் சந்தேகங்களைப் போக்கும் வகையில், மாநில அரசு உடனடியாக சண்டிகர் அரசுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மற்ற மாநிலங்களில் தமிழக மாணவர்கள், குறிப்பாக மருத்துவ மேற்படிப்பு படித்து வரும் மாணவர்கள் தங்களுடைய கல்வியைத் தொடர முடியாமல் போவதற்குரிய காரணங்களை ஆராயவும், அவர்களின் திடீர் மரணங்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யவும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைக்க மத்திய - மாநில அரசுகள் உடனடியாக முன்வர வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.