குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்பவைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கரை தப்ப வைக்கும் முயற்சியாகவே லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த மஞ்சுநாதா மாற்றப்பட்டுள்ளார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவார் என்று முன்னதாகவே கூறியிருந்தார் ஸ்டாலின். இதனைத் தொடர்ந்து நேற்று விஜயபாஸ்கர் மற்றும் அவர் ஈடுபட்டுள்ள குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில்:

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நோக்கத்தில், ரூ.40 கோடி லஞ்சப் பரிமாற்றம் செய்யப்பட்ட ‘குட்கா’ வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த மஞ்சுநாதாவை, எவ்வித காரணமுமின்றி ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மாறுதல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

குட்கா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி தி.மு.க. சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பிற்காக காத்திருக்கின்ற நேரத்தில் திடீரென்று அந்த விசாரணை அதிகாரியை மாற்றுவது, குறைந்தபட்சமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரணையையும் முடக்கி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனையும் தப்பவைக்க மேற்கொள்ளும் அப்பட்டமான முயற்சி என்றே தெரிகிறது.

மதுரை ஐகோர்ட்டு கிளை, சுதந்திரமான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்டிருந்த ஜெயக்கொடியை 8-1-2018 அன்று மாற்றியது அ.தி.மு.க. அரசு. இப்போது அந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையத்தின் கீழ் இயங்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யையும் மாற்றியுள்ளது. இதில் இருந்து, குட்கா வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் மூடுவிழா நடத்துகிறது அ.தி.மு.க. அரசு என்பது தெளிவாகியுள்ளது.

ஏற்கனவே குட்காவில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அனுப்பிய கோப்பையே காணவில்லை என்றார்கள். அப்படி காணாமல்போன கோப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதில் இருந்தே, கோப்பு காணவில்லை என்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்டது என்று புலப்படுகிறது.

இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர், லஞ்ச ஊழல் தடுப்புப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. என்று விசாரணை அதிகாரிகளையும் மாற்றும் அ.தி.மு.க. அரசின் நடவடிக்கை நிர்வாக நடைமுறைகளுக்கு மாறானது, அராஜகமானது மட்டுமல்ல, கோர்ட்டு உத்தரவுகளை மீறிய செயலாகும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கவேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஏனென்றால் அ.தி.மு.க. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையமோ, லஞ்ச ஒழிப்புத் தடுப்புத்துறையோ குட்கா ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மீதோ, காவல்துறை டி.ஜி.பி.க்கள் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆகவே, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள குட்கா வழக்கில் தீர்ப்பு வருவதற்குள், அதுதொடர்பான விசாரணை அதிகாரிகளை மாற்றி, குட்கா சம்பந்தப்பட்ட கோப்புகளை மறைக்கும் அ.தி.மு.க. அரசும், அதற்கு துணைபோகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ரூ.40 கோடி குட்கா ஊழலுக்கும், மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத குட்கா விற்பனைக்கும் நிச்சயம் பதில்சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அந்த சமயத்தில் இதுபோன்ற பணி மாறுதலுக்கு துணைபோகும் உயர் அதிகாரிகளும் விசாரணை வளையத்தில் இருந்து நிச்சயம் தப்பமுடியாது என்பதையும் எச்சரிக்கையாக விடுக்க விரும்புகிறேன்.

என்று தெரிவித்திருந்தார்.

திமுகவின் மு.க. ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கு அதிமுக நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close