தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்தபடியே தனது அரசுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
70 வயதான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை காலை தனது வழக்கமான நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றலை உணர்ந்தார். இதையடுத்து, அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாக ஸ்டாலின் சிகிச்சை பெற்று வருகிறார்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரணமாக நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதாக மன்னார்குடியில் தேர்தல் சுற்றுப் பயண பரப்புரையில் பேசிய நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். முதலமைச்சர் நலமுடன் இருப்பதாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான பணிகளின் காரணமாக ஏற்பட்ட சோர்வு காரணமாகவே இந்த லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தவாறே முக்கிய அரசுப் பணிகளை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தனது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரண்டாவது நாளாக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார், மேலும் அவருக்கு வழக்கமான பரிசோதனைகளும் நடைபெற்று வருகின்றன.